கால்பந்து

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரேசில், ஈரான் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Junior World Cup football

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரேசில், ஈரான் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து:
பிரேசில், ஈரான் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரேசில், ஈரான் அணிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
கொச்சி,

17-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்கு உட்பட்டோர்) இந்தியாவில் 6 நகரங்களில் நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா, ‘பி’ பிரிவில் பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி, ‘சி’ பிரிவில் ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டாரிகா, ‘டி’ பிரிவில் வடகொரியா, நைஜர், பிரேசில், ஸ்பெயின், ‘இ’ பிரிவில் ஹோண்டுராஸ், ஜப்பான், நியூகலிடோனியா, பிரான்ஸ், ‘எப்’ பிரிவில் ஈராக், மெக்சிகோ, சிலி, இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 2-வது சுற்றுக்குள் (நாக்-அவுட்) நுழையும்.

ஸ்பெயின், பிரேசில் அபாரம்

5-வது நாளான நேற்று கொச்சியில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் அணி, நைஜரை எதிர்கொண்டது. இதில் ஆக்ரோஷம் காட்டிய ஸ்பெயின் 4-0 என்ற கோல் கணக்கில் அறிமுக அணியான நைஜரை புரட்டியெடுத்தது. ஸ்பெயின் அணியில் அபெல் ருய்ஸ் 21-வது மற்றும் 41-வது நிமிடத்திலும், சீசர் 45-வது நிமிடத்திலும், செர்ஜியோ கோமெஸ் 82-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முதல் ஆட்டத்தில் பிரேசில் அணியிடம் தோல்வி கண்ட ஸ்பெயின் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

கோவாவில் நடந்த கோஸ்டாரிகா-கினியா அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இரவில் ‘டி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் மூன்று முறை சாம்பியனான பிரேசில் அணி, வடகொரியாவுடன் மோதியது. இதில் அனுபவம் வாய்ந்த பிரேசில் அணி ஷாட்டுகளை அடிப்பதிலும், பந்தை கட்டுப்பாட்டில் (70 சதவீதம்) வைத்திருப்பதிலும் ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. பிற்பாதியில் பிரேசில் வீரர்கள் லின்கான் (56-வது நிமிடம்), பாலினோ (61-வது நிமிடம்) கோல் போட்டு 2-0 என்ற கணக்கில் வெற்றியை தேடித்தந்தனர். 2-வது வெற்றியை பெற்ற பிரேசில் அணி இதன் மூலம் அடுத்த சுற்றை உறுதி செய்தது.

ஜெர்மனி தோல்வி

சி பிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் ஈரான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை துவம்சம் செய்தது. யூனஸ் டெல்பி (6, 42-வது நிமிடம்), சயாத் (49-வது நிமிடம்), வாஹித் நம்டாரி (75-வது நிமிடம்) ஆகியோர் ஈரான் அணியின் ‘கோல்’ நாயகர்களாக வலம் வந்தனர். 2-வது வெற்றியை புசித்த ஈரானும் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. 2-வது ஆட்டத்தில் ஆடிய ஜெர்மனிக்கு இது முதலாவது தோல்வியாகும்.

இன்று (புதன்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் பிரான்ஸ்-ஜப்பான் (மாலை 5 மணி), இங்கிலாந்து-மெக்சிகோ (மாலை 5 மணி), ஹோண்டுராஸ்-நியூகலிடோனியா (இரவு 8 மணி), ஈராக்-சிலி (இரவு 8 மணி) அணிகள் மோதுகின்றன.