ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னையை வீழ்த்தியது பெங்களூரு அணி


ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னையை வீழ்த்தியது பெங்களூரு அணி
x
தினத்தந்தி 6 Feb 2018 11:15 PM GMT (Updated: 6 Feb 2018 8:30 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னையை வீழ்த்தி பெங்களூரு எப்.சி. அணி 10-வது வெற்றியை பதிவு செய்தது.

சென்னை,

4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 65-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே பெங்களூரு வீரர் போய்தாங் ஹாவ்கிப் கோல் அடித்து உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். பதிலடி கொடுக்க தாக்குதலை தீவிரப்படுத்திய சென்னை அணிக்கு 33-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. சக வீரர் லால்ரின்ஜூலா அடித்த ஷாட்டை, சென்னை வீரர் பிரான்சிஸ்கோ பெர்னாண்டஸ் தலையால் முட்டி சூப்பராக கோல் போட்டார். இதையடுத்து முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றது.

பிற்பாதியில், முன்னிலை பெற இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். 63-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் மிகு கோல் போட்டார். 71-வது நிமிடத்தில் சென்னை கேப்டன் ஹென்ரிக் செரனோ 2-வது முறையாக மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்குள்ளானார். 2 மஞ்சள் அட்டை என்பது சிவப்பு அட்டைக்கு சமம் என்பதால் அவர் வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு சென்னை அணி தள்ளப்பட்டது.

76-வது நிமிடத்தில் சென்னை வீரர் தனபால் கணேஷ் பந்துடன் கோல்பகுதியை நெருங்கிய போது எதிரணியின் ஹர்மன்ஜோத் கப்ரா தள்ளிவிட்டதால் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. ஆனால் பொன்னான பெனால்டி வாய்ப்பை, சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜெ.ஜெ. லால்பெகுலா கோட்டை விட்டார். பெனால்டியில் அவர் உதைத்த பந்தை பெங்களூரு கோல் கீப்பர் குர்பிரீத்சிங் எளிதில் தடுத்து விட்டார். சென்னை அணி சமன் செய்யும் வாய்ப்பு நழுவியதால் பெங்களூரு வீரர்கள் உற்சாகத்திற்குள்ளானார்கள்.

இறுதி கட்டத்தில் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய பெங்களூரு அணிக்கு கடைசி நேரத்தில் மேலும் ஒரு கோல் வாய்ப்பு கிட்டியது. 90-வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் சுனில் சேத்ரி கோல் அடித்தார்.

முடிவில் பெங்களூரு அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை தோற்கடித்தது. 14-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு அணி 10 வெற்றி, 4 தோல்வி என்று 30 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. சென்னை அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 2 டிரா, 4 தோல்வியுடன் 24 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் தொடருகிறது.

இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் லீக் ஆட்டத்தில் கவுகாத்தி-புனே சிட்டி அணிகள் கவுகாத்தியில் சந்திக்கின்றன.

Next Story