2–வது உலக கோப்பை (1934) நடத்திய நாடு– இத்தாலி, பங்கேற்ற அணிகள்–16


2–வது உலக கோப்பை (1934) நடத்திய நாடு– இத்தாலி, பங்கேற்ற அணிகள்–16
x
தினத்தந்தி 23 May 2018 9:10 PM GMT (Updated: 23 May 2018 9:10 PM GMT)

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) நிர்வாக குழு 8 முறை சந்தித்து நீண்ட ஆலோசனைக்கு பிறகு இரண்டாவது உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு வழங்கியது.

ர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) நிர்வாக குழு 8 முறை சந்தித்து நீண்ட ஆலோசனைக்கு பிறகு இரண்டாவது உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை ஐரோப்பிய நாடான இத்தாலிக்கு வழங்கியது. மொத்தம் 32 அணிகள் பங்கேற்க விருப்பம் தெரிவித்து இருந்தன. இதையடுத்து தகுதி சுற்று மூலம் 16 அணிகள் வெளியேற்றப்பட்டது. போட்டியை நடத்திய நாடு நேரடியாக தகுதி பெறாமல், தகுதி சுற்றில் ஆடிய ஒரே உலககோப்பை இது தான்.

முதலாவது உலக கோப்பை தென்அமெரிக்க நாடான உருகுவேயில் நடந்த போது, ஐரோப்பிய அணிகள் கலந்து கொள்ள தயங்கின. ‘பிபா’ தலைவர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு வெறும் 4 ஐரோப்பிய அணிகள் மட்டும் கலந்து கொண்டன. ஆனால் இத்தாலி வரவில்லை. இதற்கு பதிலடியாக நடப்பு சாம்பியன் உருகுவே 2–வது உலக கோப்பையில் இருந்து ‘ஜகா’ வாங்கியது. நடப்பு சாம்பியன் பங்கேற்காத ஒரே உலக கோப்பை இது தான். இதே போல் அர்ஜென்டினா, பிரேசில் நாடுகள் தங்களது 2–ம் தர அணிகளையே அனுப்பி வைத்தன. அர்ஜென்டினா அணியில் முதலாவது உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை. அர்ஜென்டினா அணிக்கு 26 வயதான பெலிப் பாஸ்குச்சி பயிற்சியாளராக செயல்பட்டார். இவர் தான் உலக கால்பந்து அணியின் குறைந்த வயது பயிற்சியாளர் என்ற சிறப்புக்குரியவர் ஆவார்.

பிரதான சுற்றை எட்டிய 16 அணிகள் லீக் சுற்றுக்கு பதிலாக நேரடியாக ‘நாக்–அவுட்’ சுற்றில் மோதின. மொத்தம் 8 நகரங்களில் ஆட்டங்கள் நடந்தன. ஸ்பெயின் 3–1 என்ற கோல் கணக்கில் பிரேசிலையும், சுவீடன் அணி 3–2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவையும் விரட்டின. இத்தாலி 7–1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை பந்தாடியது.

நாக்–அவுட் முதல் 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. இத்தாலி–ஸ்பெயின் அணிகள் இடையிலான கால்இறுதி ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 30 நிமிட கூடுதல் நேரத்திலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. அந்த சமயம் கூடுதல் நேரத்திலும் சமநிலை நீடித்தால் மறுநாள் ஆட்டம் நடத்தப்படும் என்று விதிமுறை வகுக்கப்பட்டிருந்தது. பெனால்டி ஷூட்–அவுட் முறை கிடையாது. இந்த ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர். சில வீரர்கள் காயமடைந்து மறுநாள் ஆட்டத்தில் விளையாட முடியாத நிலைமை உருவானது. இத்தாலி நடுகள வீரர் மரியோ பிஸ்சிலோவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மறுபடியும் நடத்தப்பட்ட கால்இறுதியில் இத்தாலி 1–0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வென்றது.

அரைஇறுதி ஆட்டங்களில் இத்தாலி 1–0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவையும், செக்கோஸ்லோவக்கியா 3–0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியையும் சாய்த்தன.

இத்தாலி– செக்கோஸ்லோவக்கியா இடையிலான இறுதி ஆட்டம் ஜூன் 10–ந்தேதி ரோம் நகரில் அரங்கேறியது. முதல் பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை. 71–வது நிமிடத்தில் செக்கோஸ்லோவக்கியா வீரர் ஆன்டோனின் புக் கோல் போட்டார். 81–வது நிமிடத்தில் இத்தாலி வீரர் ரைமுன்டோ ஓர்சி பதில் கோல் திருப்பினார். வழக்கமான நேரத்தில் 1–1 என்ற சமநிலை நீடித்ததால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் 5–வது நிமிடத்தில் இத்தாலி வீரர் ஏஞ்சலோ சியாவியோ கோல் அடித்து தங்கள் அணியை உலக சாம்பியனாக உருவெடுக்க வைத்தார். உலக கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையை இத்தாலி பெற்றது. இந்த தொடரில் மொத்தம் 17 ஆட்டங்களில் 70 கோல்கள் பதிவாகின. அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த செக்கோஸ்லோவக்கியா வீரர் ஓல்டுரிச் நிஜெட்லி (5 கோல்) தங்க ஷூ விருதை பெற்றர்£.

இந்த உலக கோப்பையில் சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. அப்போது இத்தாலியை ஆட்சி செய்த சர்வாதிகாரி முசோலினி இந்த உலக கோப்பையை தனது பாசிச கொள்கைகளை பரப்புவதற்கு ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டார். மேலும் இத்தாலி அணி விளையாடும் ஆட்டங்களுக்கான போட்டி நடுவர்களை அவரே தேர்வு செய்ததாகவும், ‘பிபா’வின் நடவடிக்கைகளில் தலையிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் குற்றச்சாட்டுகள் உறுதியான ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை.

உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இரண்டு நாட்டுக்காக கால்பதித்த வீரர்

1930–ம் ஆண்டு முதலாவது உலக கோப்பை இறுதி ஆட்டத்தில், அர்ஜென்டினா அணிக்காக விளையாடியவர் லூயிஸ் மோன்டி. பிறகு இத்தாலிக்கு இடம்பெயர்ந்து அங்கு யுவென்டஸ் கிளப் போட்டிகளில் விளையாடிய அவர் அந்த நாட்டின் குடியுரிமையை பெற்றார். அதன் தொடர்ச்சியாக இத்தாலி அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றார். 1934–ம் ஆண்டு உலக கோப்பையில் மகுடம் சூடிய இத்தாலி அணியில் லூயிஸ் மோன்டியும் இடம் பிடித்திருந்தார். இரண்டு நாட்டுக்காக இரண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பங்கேற்ற ஒரே வீரர் லூயிஸ் மோன்டி தான்.


Next Story