கால்பந்து போட்டிக்கு பின் மைதானத்தினை சுத்தம் செய்து அனைவரையும் கவர்ந்த ஜப்பான் ரசிகர்கள்


கால்பந்து போட்டிக்கு பின் மைதானத்தினை சுத்தம் செய்து அனைவரையும் கவர்ந்த ஜப்பான் ரசிகர்கள்
x
தினத்தந்தி 20 Jun 2018 7:49 AM GMT (Updated: 20 Jun 2018 7:49 AM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் வெற்றியை ஜப்பான் அணி கொண்டாடிய நிலையில் அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்தினை சுத்தம் செய்து அனைவரையும் கவர்ந்திழுத்தனர்.

டோக்கியோ,

உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடந்து வருகிறது.  இதில் நேற்று நடந்த போட்டியில் கொலம்பியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின.  ஜப்பான் அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி தொடக்க போட்டியிலேயே முதல் வெற்றியை பெற்றது.  தென்னமெரிக்க பகுதியிலுள்ள அணி ஒன்றிற்கு எதிராக ஜப்பான் பெற்றுள்ள முதல் வெற்றி இதுவாகும்.

பொதுவாக போட்டி முடிந்தபின் உணவு கழிவுகள், தேநீர் அல்லது காபி அருந்திய கோப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் உறைகள் போன்றவற்றை மைதானத்தில் ரசிகர்கள் போட்டு விட்டு சென்று விடுவர்.

ஆனால் ஜப்பான் ரசிகர்கள் இதற்கு முற்றிலும் வேறுபட்டவர்கள்.  அவர்கள் தங்களது வரிசையில் இருந்த இருக்கைகளை சுத்தம் செய்ய தொடங்கினர்.  இது கால்பந்து கலாசாரத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல.  ஜப்பானின் கலாசாரம் என ரசிகர் ஒருவர் கூறியுள்ளார்.

குழந்தை பருவத்தில் இருந்தே ஜப்பானிய மக்களுக்கு இந்த பழக்கம் கற்று தரப்படுகிறது.

கால்பந்து போட்டிகளுக்கு பின் சுத்தம் செய்யும் அடிப்படை பழக்கம் பள்ளி கூடத்தில் இருந்து அவர்களுக்கு வந்துள்ளது.  பள்ளி கூடத்தில் மாணவ மாணவிகள் தங்களது வகுப்பு அறைகள் மற்றும் முன் அறைகளை சுத்தம் செய்வார்கள்.  உலக கோப்பை போட்டி போன்ற நிகழ்ச்சிகளில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு ஜப்பானிய ரசிகர்கள் தங்களது வாழ்வின் பெருமையை விளக்குகிறார்கள் என அந்த ரசிகர் கூறினார்.


Next Story