கால்பந்து

மொராக்கோ அணியின் சவாலை சமாளித்து டிரா செய்த ஸ்பெயின் - அடுத்த சுற்றுக்கு முன்னேறியது + "||" + Spain managed to overcome the challenge of Morocco and advanced to the next round

மொராக்கோ அணியின் சவாலை சமாளித்து டிரா செய்த ஸ்பெயின் - அடுத்த சுற்றுக்கு முன்னேறியது

மொராக்கோ அணியின் சவாலை சமாளித்து டிரா செய்த ஸ்பெயின் - அடுத்த சுற்றுக்கு முன்னேறியது
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின்-மொராக்கோ அணிகள் மோதிய லீக் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் தனது பிரிவில் முதலிடம் பிடித்த ஸ்பெயின் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
கலினிங்கிராட்,

உலக கோப்பை கால்பந்து போட்டி கலினிங்கிராட் நகரில் நேற்று முன்தினம் இரவு ‘பி’ பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி தொடக்கம் முதலே பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்ததுடன், எதிரணியின் கோல் எல்லையையும் அவ்வப்போது முற்றுகையிட்டு தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தது. இருப்பினும் அந்த அணிக்கு மொராக்கோ அணியின் தடுப்பு அரணை தகர்ப்பது எளிதான காரியமாக இருக்கவில்லை.


எதிரணியின் எல்லைப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணியின் தடுப்பு ஆட்டத்தில் சில சந்தர்ப்பங்களில் பலவீனம் வெளிப்பட்டது. அதனை மொராக்கோ அணி கச்சிதமாக பயன்படுத்தி கொண்டது. 14-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ், இனியஸ்டா ஆகியோர் பந்தை யார்? தன்வசப்படுத்துவது என்பதில் குழப்பம் அடைந்து ஒரு வினாடி தாமதித்தனர். அந்த நேரத்தில் பந்தை கைப்பற்றிய மொராக்கோ அணி வீரர் காலித் போடாய்ப், நடுகளத்தில் இருந்து வேகமாக கடத்தி சென்று, முன்னால் வந்து தடுத்த ஸ்பெயின் அணியின் கோல் கீப்பர் டேவிட் டேகியை ஏமாற்றி அருமையாக கோல் அடித்தார்.

19-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி பதில் கோல் திருப்பியது. இனியஸ்டா கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் இஸ்கோ கோலுக்குள் அனுப்பினார். 25-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் பின்கள வீரர்களின் சிறுப்பிள்ளைத்தனத்தால், மொராக்கோ வீரர் காலித் போடாய்புக்கு மீண்டும் கோல் அடிக்க வாய்ப்பு உருவானது. ஆனால் இந்த முறை ஸ்பெயின் அணியின் கோல் கீப்பர் சிறப்பாக செயல்பட்டு தடுத்து பந்தை வெளியேற்றினார். முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலை வகித்தன.

பிற்பாதி ஆட்டத்திலும் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தினாலும், அந்த அணிக்கு கோல் அடிப்பது என்பது கடினமான விஷயமாகவே இருந்தது. 81-வது நிமிடத்தில் மொராக்கோ அணி 2-வது கோல் போட்டது. கார்னர் வாய்ப்பில் சக வீரர் கோலை நோக்கி அடித்த பந்தை, அந்த அணியின் மாற்று ஆட்டக்காரர் யூசெப் என் நெய்ஸ்ரி தலையால் முட்டி அபாரமாக கோலாக்கினார்.

பதில் கோல் திருப்ப ஸ்பெயின் அணி தீவிரம் காட்டியது. அதற்கு கடைசி நிமிடத்தில் பலன் கிடைத்தது. கார்னர் பகுதியில் இருந்து அந்த அணி வீரர் டேனி கர்வஜால் கோலை நோக்கி அடித்த பந்தை மாற்று ஆட்டக்காரர் இயாகோ ஆஸ்பாஸ் பின்நோக்கி காலால் அடித்து கோலுக்குள் திணித்தார். இதனை நடுவர் ‘ஆப்-சைடு’ என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து ஸ்பெயின் அணியினர், நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்தனர். வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்த பிறகு அது கோல் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பரபரப்பான தருணத்தில் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டனர்.

கடைசி நிமிட கோலால் ஸ்பெயின் அணி தோல்வியில் இருந்து தப்பியது. முடிவில் பரபரப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதாக மொராக்கோ அணியின் கேப்டன், கோல்கீப்பர் உள்பட 6 வீரர்கள் நடுவரால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டனர். லீக் முடிவில் ஒரு வெற்றி, 2 டிரா கண்ட ஸ்பெயின் அணி தனது பிரிவில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் 16) முன்னேறியது. மொராக்கோ அணி தனது பிரிவில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.

மாஸ்கோவில் ஜூலை 1-ந் தேதி நடைபெறும் 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் அணி, ‘ஏ’ பிரிவில் 2-வது இடம் பிடித்த ரஷியாவை எதிர்கொள்கிறது.