கால்பந்து

பனாமாவை வீழ்த்தி 40 ஆண்டுக்கு பிறகு துனிசியா அணி முதல் வெற்றி + "||" + 40 years after the defeat of Panama, Tunisia's team won first

பனாமாவை வீழ்த்தி 40 ஆண்டுக்கு பிறகு துனிசியா அணி முதல் வெற்றி

பனாமாவை வீழ்த்தி 40 ஆண்டுக்கு பிறகு துனிசியா அணி முதல் வெற்றி
பனாமாவை வீழ்த்தி துனிசியா அணி முதல் வெற்றிபெற்றது. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் இங்கிலாந்து தோல்வியடைந்தது.
சரான்ஸ்க்,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் துனிசியா அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பனாமாவை தோற்கடித்து 40 ஆண்டுக்கு பிறகு முதல் வெற்றியை பெற்றது.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சரான்ஸ்க் நகரில் நேற்று முன்தினம் இரவு ‘ஜி’ பிரிவில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் ஒரு ஆட்டத்தில் துனிசியா அணி, அறிமுக அணியான பனாமாவை சந்தித்தது. ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட இந்த இரு அணிகளும் ஆறுதல் வெற்றிக்காக களம் கண்டன.

33-வது நிமிடத்தில் பனாமா அணிக்கு முதல் கோல் கிட்டியது. அந்த அணி வீரர் ஜோஸ் லூயிஸ் ரோட்ரிக்ஸ் கோலை நோக்கி அடித்த பந்து துனிசியா அணியின் பின்கள வீரர் யாசின் மெரியா காலில் பட்டு சுய கோலாக (ஓன் கோல்) மாறியது.

அடுத்து பதில் கோல் திருப்ப துனிசியா அணி ஆக்ரோஷமாக ஆடியது. கோல் விழாமல் தற்காத்து கொள்ள பனாமா அணியினர் தடுப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தினாலும், எதிரணியின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. 51-வது நிமிடத்தில் துனிசியா வீரர் வாபி காஸ்ரி கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் பென் யூசெப் மின்னல் வேகத்தில் கோலுக்குள் அனுப்பினார். 66-வது நிமிடத்தில் துனிசியா இன்னொரு கோலை திணித்தது. இந்த கோலை வாபி காஸ்ரி அடித்தார். முடிவில் துனிசியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் பனாமாவை தோற்கடித்தது.

உலக கோப்பை போட்டியில் 40 ஆண்டுக்கு பிறகு முதல் வெற்றியை சுவைத்த துனிசியா அணி தனது பிரிவில் 3-வது இடத்தை பிடித்தது. கடைசியாக அந்த அணி தனது அறிமுக போட்டியான 1978-ம் ஆண்டு உலக கோப்பையில் மெக்சிகோவுக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் (3-1) வெற்றி பெற்று இருந்தது.

இதே பிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் பெல்ஜியத்துடன் மோதியது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே அடுத்த சுற்றை எட்டிவிட்டதால் இது சம்பிரதாய மோதலாகவே அமைந்தது. இதனால் இங்கிலாந்து அணியில் 8 மாற்றங்களும், பெல்ஜியம் அணியில் 9 மாற்றங்களும் செய்யப்பட்டன. இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன், பெல்ஜியம் நட்சத்திர வீரர்கள் எடன் ஹசார்ட், ரோம்லு லுகாகு ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

பெரிய அளவில் எதிர்பார்ப்பு இன்றி நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சரிசமமாக ஆதிக்கம் செலுத்தின. 10-வது நிமிடத்தில் பெல்ஜியத்துக்கு முதல் கோல் கிடைத்திருக்க வேண்டியது. கோல் கீப்பரையும் தாண்டி எல்லைக்கோட்டின் விளிம்புக்கு சென்ற பந்தை இங்கிலாந்து வீரர் கேரி காஹில் சாதுர்யமாக வெளியே தள்ளிவிட்டு காப்பாற்றினார். முதல் பாதியில் யாரும் கோல் போடவில்லை.

51-வது நிமிடத்தில் பெல்ஜியம் கோல் அடித்தது. அந்த அணி வீரர் அட்னன் ஜானுசாஜ் இடது காலால் ஓங்கி உதைத்த பந்து, இங்கிலாந்து தடுப்பாட்டக்காரர்கள் மற்றும் கோல் கீப்பர் ஜோர்டான் பிக்போர்டுவை தாண்டி அழகாக வலைக்குள் புகுந்தது. இங்கிலாந்தின் முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை.

முடிவில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை சாய்த்து ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் (3 வெற்றி) தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது. பெல்ஜியம் அணி இங்கிலாந்தை வீழ்த்துவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 82 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1936-ம் ஆண்டு நட்புறவு ஆட்டத்தில் வென்று இருந்தது.

பெல்ஜியம் அணி 2-வது சுற்றில் ஜப்பானை (ஜூலை 2-ந்தேதி) சந்திக்கிறது. இந்த பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணி (6 புள்ளி) கொலம்பியாவுடன் (ஜூலை 3-ந்தேதி) மோதுகிறது.

முதல் இரு ஆட்டங்களில் கோல்மழை பொழிந்த இங்கிலாந்து அணி, கால்இறுதியில் பிரேசிலுடன் மோதும் வாய்ப்பு உருவாகக்கூடும், அதை தவிர்க்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு இந்த ஆட்டத்தில் மெத்தனபோக்குடன் ஆடி 2-வது இடத்தை பிடித்ததாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். இங்கிலாந்து பயிற்சியாளர் சவுத்கேட் கூறுகையில், ‘8 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய நாக்-அவுட் சுற்றில் விளையாட இருக்கிறோம். அதனால் முன்னணி வீரர்களை காயமின்றி பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அதனால் தான் அவர்களுக்கு ஓய்வு கொடுத்தோம்’ என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...