பரபரப்பான பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் ஸ்பெயினை வெளியேற்றியது ரஷியா


பரபரப்பான பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் ஸ்பெயினை வெளியேற்றியது ரஷியா
x
தினத்தந்தி 1 July 2018 11:15 PM GMT (Updated: 1 July 2018 9:47 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷிய அணி பெனால்டி ஷூட்-அவுட் முறையில் ஸ்பெயினை விரட்டியடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

மாஸ்கோ,

21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் தற்போது லீக் சுற்று முடிந்து நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. நேற்று மாஸ்கோ நகரில் அரங்கேறிய 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போட்டியை நடத்திய ரஷியா, ஸ்பெயினை சந்தித்தது.

எதிர்பார்த்தது போலவே முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி களத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. 12-வது நிமிடத்தில் கார்னர் பகுதியில் இருந்து வந்த பந்தை ஸ்பெயின் வீரர் செர்ஜியோ ரமோஸ் தாவிகுதித்து முட்டுவதற்கு ஆயத்தமானார். ஆனால் அவரை அடிக்க விடக்கூடாது என்பதற்காக அருகில் நின்ற ரஷிய வீரர் செர்ஜி இக்னாஷிவிச் அவரை பிடித்து கீழே தள்ளினார். அப்போது எதிர்பாராத விதமாக பந்து செர்ஜி இக்னாஷிவிச்சின் பின்னங்காலில் பட்டு வலைக்குள் சென்று சுயகோலாக மாறியது. இதனால் குழுமியிருந்த உள்ளூர் ரசிகர்கள் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இந்த உலக கோப்பையில் பதிவான 10-வது சுய கோல் இதுவாகும்.

ரசிகர்களின் அமோக ஆதரவுடன் உத்வேகத்தை இழக்காமல் சுழன்றடித்த ரஷியாவுக்கு 41-வது நிமிடத்தில் கோல் வாய்ப்பு கிடைத்தது. கோல் பகுதியில் வைத்து பந்தை தலையால் வெளியே தள்ள முயன்ற ஸ்பெயின் வீரர் ஜெரார்டு பிக்யூவின் கையில் பந்து பட்டது. இதனால் அவருக்கு மஞ்சள் அட்டை காட்டி எச்சரித்த நடுவர், ரஷியாவுக்கு பெனால்டி வாய்ப்பினை வழங்கினார். இந்த வாய்ப்பை ரஷியாவின் ஆர்டெம் டிஸ்யூபா கோலாக்கினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.

பிற்பாதியில் இரு அணி வீரர்களும் மாறி மாறி முற்றுகையிட்ட போதிலும் கோல் கீப்பரை தாண்டி எதுவும் நடக்கவில்லை. வழக்கமான நேரத்தில் ஆட்டம் 1-1 என்று சமன் ஆனது. இதையடுத்து தலா 15 நிமிடங்கள் வீதம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதிலும் கோல் ஏதும் விழவில்லை. பந்து பெரும்பாலும் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் (74 சதவீதம்) தான் இருந்தது. 25 ஷாட்டுகளை அடித்துப் பார்த்தனர். ஆனால் அதிர்ஷ்டப்பார்வை ஸ்பெயின் மீது விழவில்லை.

கூடுதல் நேரத்திலும் 1-1 என்ற நிலை நீடித்ததால் முடிவை அறிய பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இந்த உலக கோப்பையில் பின்பற்றப்பட்ட முதல் ஷூட்-அவுட் இது தான். பெனால்டி ஷூட்-அவுட்டில் இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்படும். இதில் யார் அதிக கோல் அடிக்கிறார்களோ அந்த அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும்.

ஸ்பெயின் அணியில் இனியஸ்டா, பிக்யூ, ரஷிய அணியில் ஸ்மோலோவ், இக்னாஷிவிச் ஆகியோர் தங்களுக்குரிய முதல் இரு வாய்ப்புகளை கோலாக்கினர். ஸ்பெயினின் 3-வது வாய்ப்பில் பந்தை கோக் உதைத்த போது அதை ரஷிய கோல் கீப்பர் இகோர் அகின்பீவ் அருமையாக தடுத்தார். பின்னர் தங்களுக்குரிய 3-வது வாய்ப்பை ரஷியாவின் அலெக்சாண்டர் கோலோவின் கோலாக்கினார். 4-வது வாய்ப்பை செர்ஜியோ ரமோஸ் (ஸ்பெயின்), செரிஷிவ் (ரஷியா) தவறவிடவில்லை. அப்போது ரஷியா 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

இதைத் தொடர்ந்து 5-வது வாய்ப்பில் ஸ்பெயின் வீரர் இயாகோ ஆஸ்பாஸ் பந்தை அடித்த போது, அதை நோக்கி ரஷிய கோல் கீப்பர் அகின்பீவ் பாய்ந்தார். அப்போது பந்து அவரது காலில் பட்டு வெளியே எகிறியது. அப்போதே ரஷியாவின் வெற்றி உறுதியானதால் கடைசி வாய்ப்பை பயன்படுத்த அவசியமில்லாமல் போனது.

திரிலிங்கான பெனால்டி ஷூட்-அவுட் ஆட்டத்தின் முடிவில் ரஷிய அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. சோவியத் யூனியன் சிதறிய பிறகு, ரஷியா தனிநாடாக உலக கோப்பையில் கால்பதித்து கால்இறுதியை எட்டியது இதுவே முதல் முறையாகும்.

அதிக வயதில் சுயகோல்

* உலக கோப்பை போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் ஸ்பெயின் தோற்பது இது 3-வது நிகழ்வாகும்.

* போட்டியை நடத்திய நாடுகள் பங்கெடுத்த கடைசி 4 பெனால்டி ஷூட்-அவுட்டில் உள்ளூர் அணிகளுக்கே வெற்றி கிடைத்திருக்கிறது. அந்த வரிசையில் ரஷியாவும் இணைந்துள்ளது.

* இந்த ஆட்டத்தில் சுயகோல் (ஓன்கோல்) போட்ட ரஷியாவின் இக்னாஷிவிச், அதிக வயதில் சுயகோல் அடித்தவர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அவரது வயது 38 ஆண்டு 352 நாட்கள். இதற்கு முன்பு ஹோண்டூராஸ் வீரர் நோயல் வல்டாரஸ் தனது 37-வது வயதில் சுயகோல் போட்டதே (2014-ம் ஆண்டு பிரான்சுக்கு எதிராக) இந்த வகையில் சாதனையாக இருந்தது.

3-வது சாம்பியன் ‘அவுட்’

இந்த உலக கோப்பையில் லீக் சுற்றுடன் நடப்பு சாம்பியன் ஜெர்மனி மூட்டையை கட்டியது. 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, பிரான்சுடன் உதைவாங்கி வெளியேறியது. இப்போது 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயின் அணி, ரஷியாவிடம் தோற்று நடையை கட்டியுள்ளது.


Next Story