ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது தோல்வி


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது தோல்வி
x
தினத்தந்தி 6 Oct 2018 11:00 PM GMT (Updated: 6 Oct 2018 7:38 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை அணி 2-வது முறையாக தோல்வியடைந்தது.

சென்னை,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் சென்னையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 1-3 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவா அணியிடம் தோல்வி கண்டது.

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 12-வது நிமிடத்தில் கோவா அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் எட்வர்டோ பெடியா இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. பின் பாதி ஆட்டத்திலும் கோவா அணியின் ஆதிக்கம் நீடித்தது. 53-வது நிமிடத்தில் கோவா அணி வீரர் செரிடோன் பெர்னாண்டஸ் கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் பெர்ரன் கோரோமினாஸ் கோலாக்கினார்.

80-வது நிமிடத்தில் கோவா அணி 3-வது கோல் போட்டது. பிரிகிக் வாய்ப்பில் கோவா அணி வீரர் அகமது ஜஹோவா கோலை நோக்கி அடித்த பந்தை சக வீரர் முர்தடா பால் தலையால் முட்டி கோலுக்குள் திணித்தார். இதனால் கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது. கடைசி நிமிடத்தில் சென்னை அணி ஆறுதல் கோல் அடித்தது. கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி சென்னை அணியின் மாற்று ஆட்டக்காரர் ஆந்த்ரே ஒர்லான்டி கோலை நோக்கி அடித்த பந்தை சக வீரர் சபியா பில்ஹோ தலையால் முட்டி கோலாக்கினார். முன்னதாக சென்னை அணி கோல் அடிக்க கிடைத்த சில வாய்ப்புகளை வீணடித்தது. முடிவில் கோவா அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. அந்த அணி முதல் ஆட்டத்தில் கவுகாத்தியுடன் டிரா கண்டு இருந்தது. சென்னை அணி தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். சென்னை அணி முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வி கண்டு இருந்தது.

பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் மோதுகின்றன.


Next Story