கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி மீண்டும் தோல்வி + "||" + The Chennai team failed again

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி மீண்டும் தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி மீண்டும் தோல்வி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி 3-4 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியிடம் தோல்வி கண்டது.
சென்னை, 

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி 3-4 என்ற கோல் கணக்கில் கவுகாத்தி அணியிடம் தோல்வி கண்டது.

10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி) அணிகள் மோதின.

தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன. 5-வது நிமிடத்தில் சென்னை அணி முதல் கோல் அடித்தது. கார்னர் வாய்ப்பில் சென்னை அணி வீரர் இனிகோ கால்ட்ரோன் கோலை நோக்கி அடித்த பந்தை கவுகாத்தி அணி வீரர் ரோவ்லிங் போர்ஜெஸ் தடுக்க முயற்சித்தார். ஆனால் பந்து அவர் மீது பட்டு சுயகோலாக மாறியது. 15-வது நிமிடத்தில் சென்னை அணி 2-வது கோல் போட்டது. தோய் சிங் இந்த கோலை அடித்தார். இதனால் சென்னை அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

29-வது நிமிடத்தில் கவுகாத்தி அணி முதல் கோல் திருப்பியது. அந்த அணியின் கேப்டன் பார்தோலோம் ஒக்பேச் இந்த கோலை அடித்தார். 32-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் தோய்சிங் மீண்டும் கோல் அடித்து அசத்தினார். ஆக்ரோஷமாக ஆடிய கவுகாத்தி அணி வீரர் பார்தோலோன் ஒக்பேச் 37-வது மற்றும் 39-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தார். முதல் பாதியில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

54-வது நிமிடத்தில் கவுகாத்தி அணி 4-வது கோலை அடித்தது. ரோவ்லிங் போர்ஜெஸ் இந்த கோலை அடித்தார். இதனால் கவுகாத்தி அணி முன்னிலை பெற்றது. கடைசி கட்டத்தில் நட்சத்திர வீரர் ஜெஜெ லால்பெகுலாவை மாற்று ஆட்டக்காரராக சென்னை அணி களம் இறக்கியது. ஆட்டத்தை சமனில் முடித்து விட சென்னை அணி தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

முடிவில் கவுகாத்தி அணி 4-3 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் அந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. தொடர்ச்சியாக 3-வது தோல்வியை சந்தித்த நடப்பு சாம்பியனான சென்னை அணி கடைசி இடத்தில் உள்ளது.