ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகம் சென்றது


ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகம் சென்றது
x
தினத்தந்தி 20 Dec 2018 9:00 PM GMT (Updated: 20 Dec 2018 8:45 PM GMT)

17–வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 5–ந் தேதி முதல் பிப்ரவரி 1–ந் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது.

அபுதாபி, 

17–வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 5–ந் தேதி முதல் பிப்ரவரி 1–ந் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டம் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3–வது இடம் பிடிக்கும் அணிகளில் சிறந்த 4 அணிகள் ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தாய்லாந்துடனும் (ஜனவரி 6–ந்தேதி), 2–வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடனும் (ஜனவரி 10–ந்தேதி), கடைசி லீக் ஆட்டத்தில் பக்ரைனுடனும் (ஜனவரி 14–ந்தேதி) மோதுகிறது. இந்த போட்டிக்காக சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி நேற்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றது. போட்டி தொடங்குவதற்கு 17 நாட்களுக்கு முன்னதாகவே இந்திய அணி சென்றுள்ளது. இந்திய அணியினருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story