ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா–தாய்லாந்து அணிகள் இன்று மோதல்


ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா–தாய்லாந்து அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 5 Jan 2019 9:30 PM GMT (Updated: 5 Jan 2019 8:14 PM GMT)

17–வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று இரவு தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உள்பட 24 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

அபுதாபி,

17–வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று இரவு தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உள்பட 24 அணிகள் கலந்து கொண்டுள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, பக்ரைன் ஆகியவை அந்த பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளாகும். லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3–வது இடம் பெறும் அணிகளில் 4 சிறந்த அணிகள் 2–வது சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் அபுதாபியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தாய்லாந்தை எதிர்கொள்கிறது. சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி தரவரிசையில் 97–வது இடத்தில் உள்ளது. தீராசில் டாங்டா தலைமையிலான தாய்லாந்து அணி தரவரிசையில் 118–வது இடத்தில் இருக்கிறது. இரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் தாய்லாந்து அணி 12 முறையும், இந்திய அணி 5 தடவையும் வென்று இருக்கின்றன. 7 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. இன்றைய ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. முன்னதாக நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா–ஜோர்டான் அணிகள் (பி பிரிவு மாலை 4.30 மணி) மோதுகின்றன.


Next Story