கால்பந்து

ஆசிய கோப்பை கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா தாய்லாந்தை பந்தாடியது + "||" + Asian Cup Football: The victory started with India

ஆசிய கோப்பை கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா தாய்லாந்தை பந்தாடியது

ஆசிய கோப்பை கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா தாய்லாந்தை பந்தாடியது
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணி 4–1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை பந்தாடியது.

அபுதாபி,

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணி 4–1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை பந்தாடியது.

ஆசிய கோப்பை கால்பந்து

17–வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்–2 இடத்தை பிடிக்கும் அணிகள் மற்றும் 3–வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 12 அணிகள் 2–வது சுற்றுக்கு தகுதி பெறும். இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, பக்ரைன் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் அங்கம் வகிக்கின்றன.

தரவரிசையில் 97–வது இடம் வகிக்கும் இந்திய அணி, தங்களை விட 21 இடங்கள் பின்தங்கிய அணியான தாய்லாந்தை அபுதாபியில் நேற்று சந்தித்தது. தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் ஆக்ரோ‌ஷமாக விளையாடினர். 27–வது நிமிடத்தில் இந்திய வீரர் சரனோன் அனுன் அடித்த ஷாட்டை தாய்லாந்து கோல் கீப்பர் சாட்சாய் பூட்பிரோன் தடுத்தார். திரும்பி வந்த பந்து அருகில் நின்ற தாய்லாந்து வீரர் தீரதோன் புன்மதனின் கையில் பட்டு விட்டது. இதனால் இந்தியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த பெனால்டியை இந்திய கேப்டன் சுனில் சேத்ரி கோலாக மாற்றினார். ஆனால் இந்த மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. சிறிது நேரத்தில் தாய்லாந்து வீரர் தீராசில் டாங்டா (33–வது நிமிடம்) பதில் கோல் திருப்பினார்.

இந்தியா வெற்றி

இதன் பிறகு இந்திய வீரர்கள் அடுத்தடுத்து தாய்லாந்தின் கோல்பகுதியை முற்றுகையிட்டனர். அதற்கு பலனும் கிடைத்தது. 46–வது நிமிடத்தில் வலது பகுதியில் இருந்து உதன்டா சிங் அடித்த பந்தை மற்றொரு இந்திய வீரர் ஆஷிக் குருனியன், சக வீரர் சுனில் சேத்ரி பக்கம் திருப்பினார். அவர் அதை அழகாக கோலுக்குள் அனுப்பி அசத்தினார். தொடர்ந்து அனிருத் தாபா (68–வது நிமிடம்), மாற்று ஆட்டக்காரர் ஜெஜெ லால்பெகுலா (80–வது நிமிடம்) ஆகிய இந்தியர்களும் கோல் போட்டு தாய்லாந்தை தவிடுபொடியாக்கினர்.

முடிவில் இந்திய அணி 4–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இந்த போட்டியை அமர்க்களமாக தொடங்கி இருக்கிறது. ஆசிய கால்பந்து போட்டியில் 4–வது முறையாக அடியெடுத்து வைத்துள்ள இந்திய அணிக்கு 55 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த முதல் வெற்றி இது தான். அதாவது 1964–ம் ஆண்டு ஆசிய போட்டியில் 2 வெற்றிகள் பெற்ற பிறகு இந்திய அணி தற்போது தான் முத்திரை பதித்திருக்கிறது. இந்திய அணி தனது அடுத்த லீக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தை 10–ந்தேதி சந்திக்கிறது.

மற்ற ஆட்டங்கள்

முன்னதாக நடந்த ஐக்கிய அரபு அமீரகம்–பக்ரைன் இடையிலான ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் (ஏ பிரிவு) சமனில் முடிந்தது. இன்னொரு ஆட்டத்தில் ஜோர்டான் அணி 1–0 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு (பி பிரிவு) அதிர்ச்சி அளித்தது.

இன்றைய லீக் ஆட்டங்களில் சீனா–கிர்கிஸ்தான், தென்கொரியா–பிலிப்பைன்ஸ் அணிகள் (சி பிரிவு) மோதுகின்றன.

மெஸ்சியை முந்திய சேத்ரி

இந்திய கேப்டன் 34 வயதான சுனில் சேத்ரி நேற்று அடித்த 2 கோல்களையும் சேர்த்து சர்வதேச போட்டியில் அவரது ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 67–ஆக (105 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் அதிக சர்வதேச கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் 2–வது இடத்தில் இருந்த அர்ஜென்டினா ஜாம்பவான் லயோனல் மெஸ்சியை (128 ஆட்டத்தில் 65 கோல்) பின்னுக்கு தள்ளினார். தற்போது ஆடும் வீரர்களில் அதிகபட்சமாக போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ 85 கோல்கள் (154 ஆட்டம்) போட்டு முதலிடம் வகிக்கிறார்.