கோபா அமெரிக்கா கால்பந்து சிலி அணிக்கு அதிர்ச்சி அளித்து பெரு இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


கோபா அமெரிக்கா கால்பந்து சிலி அணிக்கு அதிர்ச்சி அளித்து பெரு இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 4 July 2019 11:50 PM GMT (Updated: 4 July 2019 11:50 PM GMT)

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் பெரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ரியோடிஜெனீரோ,

பிரேசிலில் நடந்து வரும் 46-வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த 2-வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் சிலி அணி, முன்னாள் சாம்பியன் பெருவை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தின. 21-வது நிமிடத்தில் பெரு அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீரர் வலது புறத்தில் இருந்து கோல் எல்லையை நோக்கி அடித்த பந்தை சக வீரர் எடிசன் புளோர்ஸ் இடது காலால் உதைத்து கோலுக்குள் திணித்தார்.

38-வது நிமிடத்தில் பெரு வீரர் ஆந்த்ரே காரில்லோ கோல் எல்லையை நோக்கி தூக்கி அடித்த பந்தை சக வீரர் யோஷிமர் யோதுன் நெஞ்சால் தடுத்து நிறுத்தியதுடன் மின்னல் வேகத்தில் இடது காலால் உதைத்து பந்தை வலைக்குள் அனுப்பினார்.

சிலி வீரர்கள் பதிலடி கொடுக்க எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. பந்தை 65 சதவீதம் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்த சிலி அணி கோல் இலக்கை நோக்கி அடித்த 7 ஷாட்களையும் பெரு அணியினர் தடுத்து நிறுத்தினர்.

இதற்கிடையே, கடைசி நிமிடத்தில் (இஞ்சுரி டைம்) பெரு அணி வீரர் பாலோ குர்ரிரோ, சிலி கோல் கீப்பர் கேப்ரியல் அரியாஸ்சை ஏமாற்றி அருமையாக கோல் அடித்தார். முடிவில் பெரு அணி 3-0 என்ற கோல் கணக்கில் சிலிக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2 முறை சாம்பியனான பெரு அணி 1975-ம் ஆண்டுக்கு பிறகு கோபா அமெரிக்கா போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல்முறையாகும்.

இந்திய நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு நடைபெறும் இறுதிஆட்டத்தில் பெரு அணி, பிரேசிலை எதிர்கொள்கிறது. லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி 5-0 என்ற கோல் கணக்கில் பெருவை தோற்கடித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் அணியின் முன்கள வீரர் வில்லியன் காயம் காரணமாக இறுதிப்போட்டியில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story