உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஓமனிடம் இந்திய அணி தோல்வி


உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஓமனிடம் இந்திய அணி தோல்வி
x
தினத்தந்தி 6 Sep 2019 12:07 AM GMT (Updated: 6 Sep 2019 12:07 AM GMT)

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று, இந்த போட்டிக்கான ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

கவுகாத்தி,

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தாரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.  இந்த தகுதி சுற்றின் 3-வது ரவுண்டில் 40 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய அணி இ பிரிவில் ஓமன், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய அணிகளுடன் அங்கம் வகிக்கிறது.

இந்த நிலையில் தரவரிசையில் 103-வது இடத்தில் உள்ள இந்திய அணி, தனது முதலாவது லீக்கில் 87-ம் நிலை அணியான ஓமனை கவுகாத்தியில் நேற்றிரவு எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் கண்ட இந்திய அணி முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. 24-வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார். முதல் பாதியில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

பதில் கோல் திருப்ப ஓமன் வீரர்கள் பிற்பாதியில் வரிந்து கட்டி நின்றனர். 82-வது நிமிடத்தில் ஓமன் வீரர் அல்மந்தர் கோல் அடித்தார். தொடர்ந்து 89-வது நிமிடத்தில் இந்திய தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி மீண்டும் அவர் ஒரு கோல் திணித்து இந்திய வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். முடிவில் ஓமன் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. சர்வதேச போட்டியில் இந்திய அணி ஓமனை இதுவரை வென்றது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் கத்தாரை வருகிற 10-ந்தேதி தோகாவில் சந்திக்கிறது.

Next Story