ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வீழ்த்தி கோவா அணி 11-வது வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வீழ்த்தி கோவா அணி 11-வது வெற்றி
x
தினத்தந்தி 12 Feb 2020 11:27 PM GMT (Updated: 12 Feb 2020 11:27 PM GMT)

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கோவா,

இதில் கோவா நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 80-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா, மும்பை சிட்டி அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய எப்.சி. கோவா 5-2 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தியது.

கோவா அணியில் பெர்ரன் கோரோமினாஸ் (20 மற்றும் 80-வது நிமிடம்), ஹூகோ பவுமோஸ் (38-வது நிமிடம்), ஜாக்கிசந்த் சிங் (39-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். இன்னொரு கோல் எதிரணி வீரர் முகமது ரபிக் மூலம் சுயகோலாக கிடைத்தது. மேலும் நடப்பு தொடரில் அதிக கோல் எடுத்தவர்களின் பட்டியலில் கோவா வீரர் கோரொமினாஸ் 13 கோல்களுடன், கொல்கத்தா வீரர் ராய் கிருஷ்ணாவுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.

17-வது லீக்கில் ஆடிய கோவா அணி 11 வெற்றி, 3 டிரா, 3 தோல்வி என்று 36 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. கோவா, அட்லெடிகோ டி கொல்கத்தா, நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. ஆகிய அணிகள் ஏற்கனவே கால்இறுதியை உறுதி செய்து விட்டன. எஞ்சிய ஒரு இடத்திற்கு மும்பை சிட்டி (26 புள்ளி), சென்னையின் எப்.சி (22 புள்ளி), ஒடிசா எப்.சி. (21 புள்ளி) ஆகிய அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

ஐதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் லீக்கில் ஐதராபாத் எப்.சி.- ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன.

Next Story