ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? - அரைஇறுதி 2-வது சுற்றில் கோவாவுடன் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா? - அரைஇறுதி 2-வது சுற்றில் கோவாவுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 7 March 2020 2:50 AM GMT (Updated: 7 March 2020 2:50 AM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? என்பதை நிர்ணயிக்கும் அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டத்தில் சென்னை-கோவா அணிகள் இன்று மோதுகின்றன.

கோவா, 

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் சுற்று முடிவில் எப்.சி.கோவா, அட்லெடிகோ டி கொல்கத்தா, நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., சென்னையின் எப்.சி. ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. ஒவ்வொரு அரைஇறுதியும் இரண்டு ஆட்டங்கள் கொண்டதாகும்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த மாதம் 29-ந் தேதி நடந்த அரைஇறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி 4-1 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவாவை தோற்கடித்து லீக் ஆட்டங்களில் சந்தித்த தோல்விக்கு சரியான பதிலடி கொடுத்தது.

சென்னை-கோவா

இந்த நிலையில் கோவாவில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக் கிழமை) இரவு நடைபெறும் அரைஇறுதியின் 2-வது சுற்று ஆட்டத்தில் எப்.சி.கோவா-சென்னையின் எப்.சி. அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இந்த போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமான வியூகத்துடன் களம் காணும். உள்ளூரில் நடைபெறுவதால் கோவா அணிக்கு இந்த போட்டி கூடுதல் அனுகூலமாகும். அதே நேரத்தில் அந்த அணிக்கு அதிக கோல் அடிக்க வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது.

இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி ‘டிரா’ செய்தாலே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட முடியும். அத்துடன் சென்னை அணி 2 அல்லது அதற்கு குறைந்த கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தாலும் சிக்கலின்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விடலாம். ஆனால் சென்னை அணி 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டால், சென்னை, கோவா அணிகள் தலா 4 கோல்கள் என்று சமநிலை வகிக்கும். ஆனால் வெளியூரில் அடித்த கோல் அடிப்படையில் கோவா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அதே சமயம் சென்னை அணி 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்திக்க நேர்ந்தால் இரு அணிகளும் தலா 5 கோல் என்ற சமநிலையை எட்டும். அப்போது வெளியூரில் அடித்த கோல் எண்ணிக்கையும் சமநிலையில் இருக்கும் என்பதால், அவ்வாறான சூழலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்படும்.

இறுதிப்போட்டிக்கு முன்னேற இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதாலும், இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதாலும் இந்த போட்டியில் சுவாரஸ்யத்துக்கு குறைவு இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

சென்னை அணியின் பயிற்சியாளர் ஓவன் கோய்லி கருத்து தெரிவிக்கையில், ‘3 கோல்கள் முன்னிலையில் இருப்பது நல்லது தான். அதற்காக நாளைய (இன்று) ஆட்டத்தை நாங்கள் எளிதாக எடுத்து கொள்ளவில்லை. இந்த ஆட்டம் அபாயகரமானது என்பது எங்களுக்கு தெரியும். கோவா சிறந்த அணியாகும். அந்த அணியை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். அவர்களின் சவாலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’ என்றார்.

Next Story