‘பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடக்கும்’ - இந்திய சம்மேளனம் நம்பிக்கை


‘பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடக்கும்’ - இந்திய சம்மேளனம் நம்பிக்கை
x
தினத்தந்தி 1 April 2020 12:33 AM GMT (Updated: 1 April 2020 12:33 AM GMT)

இந்தியாவில் நவம்பர் மாதம் பெண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று இந்திய கால்பந்து சம்மேளனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பி.பா.) சார்பில் 7-வது பெண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. நவம்பர் 2-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நவிமும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், புவனேசுவரம், கவுகாத்தி ஆகிய நகரங்களில் நடைபெறும் இந்த கால்பந்து திருவிழாவில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா மற்றும் முன்னாள் சாம்பியன்கள் வடகொரியா, ஜப்பான் ஆகிய மூன்று அணிகள் இதுவரை தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 13 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

இந்த நிலையில் ஆட்கொல்லி நோயான கொரோனா அரக்கன் இந்தியா உள்பட உலகம் முழுவதும் தலைவிரித்தாடுவதால் இந்த போட்டி திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து இந்திய கால்பந்து சம்மேளன பொதுச் செயலாளர் குஷல் தாஸ் கூறுகையில், ‘17 வயதுக்குட்பட் டோருக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இன்னும் நிறைய காலம் (7 மாதம்) உள்ளது. வரும் நாட்களில் நிலைமை எப்படி மாறுகிறது என்பதை பார்க்க வேண்டும். திட்டமிட்டபடி இந்த போட்டி நடைபெறும் என்று நம்புகிறோம். ‘பி.பா.’ நிலைமையை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் இறுதி முடிவு எடுப்பார்கள். மேலும் தள்ளிவைக்கப்பட்ட ஐரோப்பா, ஆப்பிரிக்க மண்டலத்திற்கான தகுதி சுற்று போட்டிகள் எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை. எந்த நாட்களில் அவற்றை நடத்தலாம் என்பது பற்றி மற்ற கால்பந்து சம்மேளனங்களுடன் ‘பி.பா.’ ஆலோசித்து வருகிறது’ என்றார்.

‘பி.பா.’ நிர்வாகி கூறுகையில், ‘உள்ளூர் போட்டி அமைப்பாளர்களுடன் ‘பி.பா.’ தொடர்ந்து தொடர்பில் உள்ளது. பெண்கள் ஜூனியர் உலக கோப்பை போட்டிக்கான ஏற்பாட்டில் கொரோனாவின் தாக்கம் தென்பட்டால், மாற்று திட்டம் குறித்து சிந்திப்போம்’ என்றார்.

Next Story