கொரோனா பாதிப்பு காரணமாக கேரள முன்னாள் கால்பந்து வீரர் மரணம்


கொரோனா பாதிப்பு காரணமாக கேரள முன்னாள் கால்பந்து வீரர் மரணம்
x
தினத்தந்தி 6 Jun 2020 11:56 PM GMT (Updated: 6 Jun 2020 11:56 PM GMT)

கொரோனா பாதிப்பு காரணமாக கேரள முன்னாள் கால்பந்து வீரர் மரணமடைந்தார்.

மலப்புரம், 

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பரப்பனன்காடியை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரான ஹம்சா கோயா (வயது 61) தனது குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வந்தார். கடந்த மாதம் (மே) 21-ந் தேதி அவர் குடும்பத்தினருடன் மும்பையில் இருந்து சாலை மார்க்கமாக தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அவரது குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 

இதனை அடுத்து ஹம்சா கோயா, அவரது மனைவி, மகன், மருமகள், 2 பேரக்குழந்தைகள் ஆகியோர் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கால்பந்து வீரரான ஹம்சா கோயாவுக்கு ஏற்கனவே நுரையீரல் மற்றும் இதய பிரச்சினை இருந்தால் அவரது உடல் நிலை மோசமானது. இதைத்தொடர்ந்து அவருக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஹம்சா கோயா நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹம்சா கோயா 1981-86-ம் ஆண்டுகளில் சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் மராட்டிய மாநில அணிக்காக விளையாடி இருக்கிறார். அதுதவிர மேற்கு ரெயில்வே, யூனியன் வங்கி உள்பட பல்வேறு அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story