பார்சிலோனா கோல் மழை: மெஸ்சி புதிய சாதனை


பார்சிலோனா கோல் மழை: மெஸ்சி புதிய சாதனை
x
தினத்தந்தி 19 July 2020 10:00 PM GMT (Updated: 19 July 2020 8:06 PM GMT)

ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி தனது கடைசி லீக்கில் அலாவ்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டது.

பார்சிலோனா,

ஸ்பெயினில் நடந்து வரும் லா லிகா கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி தனது கடைசி லீக்கில் அலாவ்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டது. இதில் கோல்மழை பொழிந்த பார்சிலோனா 5-0 என்ற கோல் கணக்கில் அலாவ்ஸ் அணியை பந்தாடியது. பார்சிலோனா அணியில் லயோனல் மெஸ்சி 2 கோலும், லூயிஸ் சுவாரஸ், அன்சு பாட்டி, நெல்சன் செமிடோ தலா ஒரு கோலும் அடித்தனர்.

இதையும் சேர்த்து மெஸ்சி இந்த சீசனில் மொத்தம் 25 கோல்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். முன்னதாக அவர் தட்டிக்கொடுத்த பந்தை அன்சு பாட்டி கோலாக்கிய போது மெஸ்சி புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அதாவது இந்த சீசனில் 21 முறை சக வீரர்கள் கோல் அடிக்க உதவியிருக்கிறார். இதன் மூலம் லா லிகா கால்பந்து வரலாற்றில் ஒரு சீசனில் அதிக முறை கோலுக்கு உதவிய வீரர் என்ற சிறப்பை மெஸ்சி பெற்றார். பார்சிலோனா முன்னாள் வீரர் ஸாவி இந்த வகையில் 20 கோல்கள் அடிக்க உதவியதே முந்தைய சாதனையாகும்.

இந்த சீசனில் ரியல்மாட்ரிட் அணி சாம்பியன் கோப்பையை வென்ற நிலையில் பார்சிலோனா 82 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது.


Next Story