பார்சிலோனா பயிற்சியாளர் குயிக் சேட்டின் அதிரடி நீக்கம்


பார்சிலோனா பயிற்சியாளர் குயிக் சேட்டின் அதிரடி நீக்கம்
x
தினத்தந்தி 19 Aug 2020 12:40 AM GMT (Updated: 19 Aug 2020 12:40 AM GMT)

பார்சிலோனா பயிற்சியாளர் குயிக் சேட்டின் அதிரடியாக நீக்கப்பட்டார்.

பார்சிலோனா,

ஸ்பெயினின் பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்பெயின் முன்னாள் வீரர் குயிக் சேட்டின் கடந்த 7 மாதங்களாக பணியாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன்பு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் கால்இறுதி சுற்றில் பார்சிலோனா அணி 2-8 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணியிடம் பணிந்தது. கடந்த 74 ஆண்டுகளில் பார்சிலோனா அணியின் மோசமான தோல்வியாக இது அமைந்தது. இதையடுத்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து குயிக் சேட்டின் நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கப்பட்டார்.

புதிய பயிற்சியாளராக நெதர்லாந்து முன்னாள் வீரர் 57 வயதான ரொனால்டு கோமேன் நியமிக்கப்படுகிறார். தற்போது நெதர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ரொனால்டு கோமேன் அந்த பொறுப்பில் இருந்து விலகுகிறார். பார்சிலோனா பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கு முன் ரொனால்டு கோமேன் சில நிபந்தனைகளை விதித்துள்ளார். 2020-21-ம் ஆண்டு கால்பந்து சீசனுக்கு குறிப்பிட்ட சில புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்ய வேண்டும், மூத்த வீரர் லூயிஸ் சுவாரசை கழற்றி விட வேண்டும் என்று அவர் கூறியுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே, பார்சிலோனா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி அந்த அணியை விட்டு விலக விரும்புவதாக மீண்டும் தகவல்கள் கசிந்துள்ளன.

Next Story