லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி அசத்தல் வெற்றி


லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி அசத்தல் வெற்றி
x
தினத்தந்தி 21 Dec 2020 10:30 PM GMT (Updated: 21 Dec 2020 10:16 PM GMT)

லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.

மாட்ரிட், 

ஈபரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் 34 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, ஈபர் கிளப் அணியை சந்தித்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரியல் மாட்ரிட் அணி 6-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கரிம் பென்ஜிமா இந்த கோலை அடித்தார். 13-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி அடுத்த கோலை போட்டது. கரிம் பென்ஜிமா கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் லூகா மோட்ரிச் கோல் வளையத்துக்குள் லாவகமாக திணித்தார். 28-வது நிமிடத்தில் ஈபர் அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் கார்சியா கிகே இந்த கோலை அடித்தார். முதல் பாதியில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

பிற்பாதியில் ரியல் மாட்ரிட் அணிக்கு கோல் அடிக்க கிடைத்த சில வாய்ப்புகள் கைநழுவி போனது. கடைசி நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கரிம் பென்ஜிமா கடத்தி கொடுத்த பந்தை சக வீரர் லூகாஸ் வஸ்காஸ் கோலாக்கினார். முடிவில் ரியல் மாட்ரிட் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈபரை தோற்கடித்து அசத்தியது. 14-வது ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி பெற்ற 9-வது வெற்றி இதுவாகும். அந்த அணி 2 டிரா, 3 தோல்வியுடன் மொத்தம் 29 புள்ளிகள் பெற்று 2-வது இடத்துக்கு முன்னேறியது. அட்லெடிகோ மாட்ரிட் அணி 12 ஆட்டத்தில் ஆடி 9 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 29 புள்ளிகள் குவித்துள்ளதுடன், கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.

Next Story