ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கிறது


ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கிறது
x
தினத்தந்தி 29 Jan 2021 12:27 AM GMT (Updated: 29 Jan 2021 12:27 AM GMT)

ஆசிய கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கிறது

புதுடெல்லி,

20-வது பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 20-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை நடக்கிறது. இதனை ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நேற்று அறிவித்துள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 8-ல் இருந்து 12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவை 3 பிரிவாக பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெறும். லீக் ஆட்டம் முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். கடந்த (2018) ஆசிய கோப்பை போட்டியில் முறையே முதல் 3 இடங்களை பிடித்த ஜப்பான், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் போட்டியை நடத்தும் இந்தியா ஆகிய அணிகள் நேரடியாக தகுதி பெறும். எஞ்சிய 8 அணிகள் தகுதி சுற்று போட்டி மூலம் முடிவு செய்யப்படும். தகுதி சுற்று போட்டிகள் வருகிற செப்டம்பர் 13-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெறும்.

இந்த போட்டி 2023-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி சுற்றாகவும் அமைந்துள்ளது. ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 32 அணிகள் கலந்து கொள்ளும் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story