உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஜெர்மனி, இத்தாலி அணிகள் வெற்றி


உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஜெர்மனி, இத்தாலி அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 27 March 2021 1:20 AM GMT (Updated: 27 March 2021 1:20 AM GMT)

உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி, இத்தாலி அணிகள் வெற்றி பெற்றது.

லண்டன், 

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் கத்தாரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஐரோப்பிய மண்டல தகுதி சுற்று போட்டி பல்வேறு இடங்களில் தொடங்கி நடந்து வருகிறது. தகுதி சுற்றில் பங்கேற்றுள்ள 55 அணிகள் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் இருந்து 13 அணிகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

இதன் ‘ஜெ’ பிரிவில் இடம் பிடித்துள்ள 4 முறை சாம்பியனான ஜெர்மனி அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் ஐஸ்லாந்தை சந்தித்தது. இந்த ஆட்டம் ஜெர்மனியில் உள்ள டுயிஸ்பர்க்கில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை தோற்கடித்தது. இதன் மூலம் உலக கோப்பை தகுதி சுற்று வரலாற்றில் ஜெர்மனி அணி தொடர்ச்சியாக 17-வது வெற்றியை ருசித்து சாதனை படைத்தது. ‘சி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இத்தாலி 2-0 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்தை வீழ்த்தியது. இத்தாலி அணி கடைசி 23 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போடுகிறது. ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, கிரீசுக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ கண்டது.

Next Story