24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்


24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 10 Jun 2021 10:19 PM GMT (Updated: 10 Jun 2021 10:19 PM GMT)

24 அணிகள் பங்கேற்கும் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது.

ஐரோப்பிய கால்பந்து

கால்பந்து விளையாட்டில் உலக கோப்பைக்கு அடுத்து மிகப் பெரியதும், பிரபலமானதுமான ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடக்க இருந்த இந்த போட்டி கொரோனா அச்சுறுத்தலால் ஓராண்டு தள்ளிவைக்கப்பட்டு தற்போது நடக்க உள்ளது. இதன்படி 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி வரை நடக்கிறது. வழக்கமாக ஒன்றிரண்டு நாடுகள் இணைந்து போட்டியை நடத்தும். ஆனால் இந்த கால்பந்து திருவிழா, வரலாற்றில் முதல்முறையாக இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க் உள்பட 11 நாடுகளில் அரங்கேறுகிறது.

மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் துருக்கி, இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து, பி பிரிவில் டென்மார்க், பின்லாந்து, பெல்ஜியம், ரஷியா, சி பிரிவில் நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரியா, வடக்கு மாசிடோனியா, டி பிரிவில் இங்கிலாந்து, குரோஷியா, ஸ்காட்லாந்து, செக்குடியரசு, இ பிரிவில் ஸ்பெயின், சுவீடன், போலந்து, சுலோவக்கியா, எப் பிரிவில் ஹங்கேரி, போர்ச்சுகல், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளும், 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் என மொத்தம் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். ரவுண்ட் 16-ல் இருந்து 8 அணிகள் கால்இறுதிக்கு தேர்வாகும்.

வெல்லப்போவது யார்?

ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த தலைச்சிறந்த 24 அணிகள் தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு வந்துள்ள நிலையில் எந்த அணிக்கு கோப்பையை ருசிக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சில மாதங்களாகவே கால்பந்து நிபுணர்கள் ஆரூடம் ெவளியிட்டுள்ளனர். இதில் உலக சாம்பியனான பிரான்ஸ் அணிக்கே பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பிடித்த வீரர்களில் பெரும்பாலானோர் அப்படியே நீடிப்பதால் பிரான்ஸ் மீது அசைக்க முடியாத நம்பிக்கை காணப்படுகிறது. அதிவேகமாக ஓடுவதிலும், எதிரணியின் தடுப்பு அரவணை உடைப்பதிலும் வல்லவரான ‘இளம் புயல்’ கலியன் எம்பாப்பே, சாம்பியன்ஸ் லீக்கில் செல்சி அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்த நிகோலோ கன்டே, போக்பா, கிரிஸ்மான், ஒலிவியர் ஜிரூட் ஆகிய நட்சத்திர பட்டாளம் அணியில் உள்ளனர். இவர்களுடன் ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடும் அனுபவம் வாய்ந்த கரிம் பெஞ்சிமா 6 ஆண்டுக்கு பிறகு திரும்பியிருப்பது பிரான்ஸ் அணியை மேலும் வலுவாக்கியுள்ளது.

இங்கிலாந்து அணியும் வாய்ப்பில் முன்னணியில் உள்ளது. காரெத் சவுத்கேட் பயிற்சியின் கீழ் 2018-ம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்து அரைஇறுதி வரை முன்னேறியது. கேப்டன் ஹாரிகேன் 6 கோல்கள் அடித்து தங்க ஷூவை தட்டிச் சென்றார். இதே கூட்டணி மறுபடியும் கால்பதிக்கிறது. இங்கிலாந்து அணி இதுவரை யூரோ கோப்பையை முகர்ந்ததில்லை. இறுதிப்போட்டிக்குள் நுழைந்தால், சொந்த மண்ணில் (லண்டன் வெம்ப்லி ஸ்டேடியம்) விளையாடும் அதிர்ஷ்டத்தை பெறலாம்.

ஜெர்மனி அணி பலம் வாய்ந்தது என்றாலும் நேஷனல் லீக்கில் 0-6 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் உதை வாங்கியதும், தகுதி சுற்றில் 1-2 என்ற கோல் கணக்கில் சிறிய அணியான வடக்கு மாசிடோனியாவிடம் தோற்றதும் எதிர்பார்ப்பை கொஞ்சம் குறைத்து விட்டது. 15 ஆண்டுகளாக அந்த அணியின் பயிற்சியாளராக இருக்கும் ஜோச்சிம் லோ இந்த போட்டியுடன் விடைபெறுகிறார். அதனால் வெற்றிப்பரிசுடன் கிளம்ப வேண்டும் என்ற முனைப்புடன் வியூகங்களை தீட்டுகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு முன்னணி வீரர் தாமஸ் முல்லர் அழைக்கப்பட்டு உள்ளார். பேயர்ன் முனிச் கிளப்பில் நன்றாக ஆடிய முல்லர் அதே ஆட்டத்திறனை தேசிய அணியிலும் காட்டினால் ஜெர்மனியால் மறுபடியும் எழுச்சி பெற முடியும். கிளப் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் கோல் அடித்து செல்சி அணியின் ஹீரோவாக ஜொலித்த 21 வயதான ஹவெர்ட்சும் மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சாதனையை நோக்கி ரொனால்டோ

உலகின் நம்பர் ஒன் அணியான பெல்ஜியமும் இந்த முறை ரேசில் ஓடுகிறது. தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்த பெல்ஜியம் அணியில் ஈடன் ஹசார்ட், கெவின் டி புருனே, ரோம்லு லுகாகு போன்ற தலைச்சிறந்த வீரர்கள் உள்ளனர். உலககோப்பை மற்றும் யூரோவில் இதுவரை இறுதிசுற்றை கூட எட்டிராத பெல்ஜியம் நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் வேட்கையுடன் காத்திருக்கிறது.

நடப்பு சாம்பியனான கிறிஸ்டியானா ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியையும் புறந்தள்ளி விட முடியாது. போர்ச்சுகல் அணிக்காக இதுவரை 104 கோல்கள் (175 ஆட்டம்) அடித்துள்ள ரொனால்டோ இன்னும் 6 கோல்கள் அடித்தால் ஒட்டுமொத்த சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் போட்டவரான ஈரானின் அலி டாய் (109 கோல்) சாதனையை தகர்த்து விடுவார். நடப்பு தொடரிலேயே 36 வயதான ரொனால்டோ இச்சாதனையை படைத்தார் என்றால் நிச்சயம் அந்த அணி கோப்பை தக்கவைக்கும் பயணத்தில் உச்சநிலையை அடைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதே போல் கடந்த 27 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத இத்தாலி மற்றும் ஸ்பெயின், குரோஷியா அணிகளும் எந்த நேரத்திலும் விசுவரூபம் எடுக்கும் என்பதால் களத்தில் அனல் பறக்கும்.

ரசிகர்களுக்கு கட்டுப்பாடு

தொடக்க நாளான இன்று ‘ஏ’ பிரிவில் இத்தாலியின் ரோம் நகரில் நடக்கும் ஆட்டத்தில் இத்தாலி- துருக்கி அணிகள் மோதுகின்றன. உள்ளூர் சூழல் இத்தாலிக்கு அனுகூலமாக இருக்கும். ‘ஒவ்வொரு தொடக்க ஆட்டத்திலும் ஆச்சரியங்கள் இருக்கும். எங்களாலும் அதை செய்ய முடியும் என்று நம்புகிறேன்’ என துருக்கி பயிற்சியாளர் செனோல் கினஸ் கூறியுள்ளார்.

கொேரானா தடுப்பு பாதுகாப்பு நடைமுறை காரணமாக 25 சதவீதம் ரசிகர்கள் மட்டுமே ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று இத்தாலி அரசு ஏற்கனவே கூறிவிட்டது. இதன் மூலம் 16 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை நேரில் ரசிக்க முடியும். அவர்கள் மைதானத்திற்குள் நுழைய கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், கடந்த 48 மணி நேரத்தில் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்றை எடுத்து வர வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. சோனி டென்4 சேனலில் தமிழிலும் வர்ணனை செய்யப்படுகிறது.

கொரோனா பரவலால் கொஞ்சம் முடங்கி இருந்த கால்பந்து ரசிகர்களை அடுத்த ஒரு மாதத்திற்கு யூரோ சாம்பியன்ஷிப் இனி உசுப்பேற்றப்போகிறது.

ரூ.302 கோடியை அள்ளப்போவது யார்?

யூரோ கால்பந்தில் களம் இறங்கும் ஒவ்வொரு அணிக்கும் போட்டிக்கட்டணமாக ரூ.82 கோடி கிடைக்கும். லீக் சுற்று வெற்றிக்கு ரூ.13 கோடி, டிராவுக்கு ரூ.6½ கோடி வீதம் வழங்கப்படும். இதே போல் நாக்-அவுட், கால்இறுதி, அரைஇறுதி வெற்றிகளுக்கும் பணமழை பொழியும். சாம்பியன் கோப்பையை வசப்படுத்தும் அணிக்கு அதற்குரிய பரிசுத்ெதாகை ரூ.89 கோடி வழங்கப்படும். போட்டி கட்டணம், ஒவ்வொரு சுற்று வெற்றி எல்லாவற்றையும் கணக்கிட்டால் சாம்பியன் பட்டத்தை உச்சிமுகரும் அணியால் அதிகபட்சமாக மொத்தம் ரூ.302 கோடியை பரிசாக அள்ள முடியும்.


Next Story