ஐரோப்பிய கால்பந்து போட்டி: ஜெர்மனியிடம் வீழ்ந்தது போர்ச்சுகல்


ஐரோப்பிய கால்பந்து போட்டி: ஜெர்மனியிடம் வீழ்ந்தது போர்ச்சுகல்
x
தினத்தந்தி 20 Jun 2021 12:35 AM GMT (Updated: 2021-06-20T06:05:20+05:30)

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி சுயகோல்களால் தோல்வியை தழுவியது.

ஐரோப்பிய கால்பந்து
16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 11 நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் புடாபெஸ்ட் நகரில் நேற்று நடந்த ‘எப்’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான பிரான்ஸ் அணி, ஹங்கேரியை எதிர்கொண்டது. நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய பிரான்ஸ் அணிக்கு, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் கண்ட ஹங்கேரி எல்லாவகையிலும் சவால் கொடுத்து வரிந்து கட்டியது. சில கோல் வாய்ப்புகள் பிரான்சுக்கு நழுவிப்போன நிலையில் 45-வது நிமிடத்தில் ஹங்கேரி கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது. அந்த அணியின் அட்டிலா பியோலா, எதிரணியின் இரு பின்கள வீரர்களை ஏமாற்றி பந்தை வலைக்குள் அனுப்பினார்.

பிரான்ஸ் ஆட்டம் டிரா
பிற்பாதியில் பிரான்ஸ் வீரர்கள் மேலும் ஆக்ரோஷமாக ஆடினர். 66-வது நிமிடத்தில் பிரான்ஸ் பதில் கோல் திருப்பியது. பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் தனது பக்கத்தில் இருந்து ஓங்கி உதைத்த பந்தை நேராக எதிர்முனை நோக்கி பறந்தது. அதை தன்வசப்படுத்திய சக வீரர் எம்பாப்பே, இடதுபுறம் நின்ற பெஞ்சிமா நோக்கி தட்டிவிட்டார். அதற்குள் ஹங்கேரி வீரர் ஆர்பனின் காலில் பட்டு திரும்பிய பந்தை மற்றொரு பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் கோலாக்கினார். 82-வது நிமிடத்தில் எம்பாப்பே அடித்த நல்ல ஷாட்டை ஹங்கேரி கோல் கீப்பர் பீட்டர் குலாக்சி பிரமாதமாக தடுத்து வெளியே தள்ளினார்.முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தனது முதல் ஆட்டத்தில் ெஜர்மனியை வென்றிருந்த பிரான்ஸ் தற்போது 4 புள்ளிகளுடன் உள்ளது.

இரண்டு சுயகோல்
இரவில் முனிச் நகரில் ‘எப்’ பிரிவில் அரங்கேறிய மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி, முன்னாள் உலக சாம்பியன் ஜெர்மனியுடன் கோதாவில் குதித்தது. இரு பலமான அணிகள் மல்லுகட்டியதால் களத்தில் அனல் பறந்தது. 5-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ராபின் கோசென்ஸ் அடித்த கோல் ஆப்-சைடு என்று அறிவிக்கப்பட்டது. 15-வது நிமிடத்தில் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ கோல் அடித்தார். சர்வதேச போட்டியில் அவரது 107-வது கோல் இதுவாகும். இதன் பிறகு ஜெர்மனி வீரர்கள், எதிரணி கோல் எல்லையை அடிக்கடி முற்றுகையிட்டு மிரள வைத்தனர். போர்ச்சுகல் வீரர்கள் ருபென் டயாஸ் 35-வது நிமிடத்திலும், ரபெல் குயரீரோ 39-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து சுயகோல் போட்டு அதிர்ச்சி அளித்தனர். அதாவது ஜெர்மனியின் கோல் வாய்ப்புகளை கடைசி நேரத்தில் முறியடிக்க முற்பட்ட போது பந்து அவர்களது காலில் பட்டு வலைக்குள் புகுந்து விட்டது. யூரோ கால்பந்து வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் இரண்டு சுய கோல் அடித்த ஒரே அணி போர்ச்சுகல் தான். இதனால் முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த ஜெர்மனி மேலும் உற்சாகமானது. ஜெர்மனி இளம் வீரர் ஹவெர்ட்ஸ் 51-வதுநிமிடத்திலும், ராபின் கோசென்ஸ் 60-வது நிமிடத்திலும் கோல் போட்டு போர்ச்சுகலை நிலைகுலைய வைத்தனர். இதன் பிறகு 67-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் டியாகோ ஜோட்டா கோல் அடித்தாலும் அது தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது.முடிவில் ஜெர்மனி 4-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை துவம்சம் செய்தது. 2-வது ஆட்டத்தில் ஆடிய ஜெர்மனிக்கு இது முதலாவது வெற்றியாகும். தனது முதல் ஆட்டத்தில் ஹங்கேரியை தோற்கடித்திருந்த போர்ச்சுகலுக்கு இது முதலாவது தோல்வியாகும்.

இன்றைய ஆட்டங்கள்
முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த இங்கிலாந்து- ஸ்காட்லாந்து (டி பிரிவு) இடையிலான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிரா ஆனது.

இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் இத்தாலி-வேல்ஸ் (ஏ பிரிவு, இந்திய நேரம்: இரவு 9.30 மணி), சுவிட்சர்லாந்து- துருக்கி (ஏ பிரிவு, இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story