ஐரோப்பிய கால்பந்து: போர்ச்சுகல்-பிரான்ஸ் ஆட்டம் ‘டிரா’ - இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி


ஐரோப்பிய கால்பந்து: போர்ச்சுகல்-பிரான்ஸ் ஆட்டம் ‘டிரா’ - இரு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி
x
தினத்தந்தி 24 Jun 2021 11:33 PM GMT (Updated: 24 Jun 2021 11:33 PM GMT)

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் போர்ச்சுகல்-பிரான்ஸ் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தாலும் இரு அணிகளும் அடுத்த சுற்றை எட்டின.

புடாபெஸ்ட்,

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) தொடர் 11 நாடுகளில் நடந்து வருகிறது. 24 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் (எப் பிரிவு) நடந்தது.

இதன்படி புடாபெஸ்ட் நகரில் அரங்கேறிய ஒரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி, உலக சாம்பியன் பிரான்சுடன் மல்லுகட்டியது. பலமான இரு அணிகள் கோதாவில் குதித்ததால் களத்தில் முதல் நிமிடத்தில் இருந்தே அனல் பறந்தது. பந்தை கடத்துவதிலும், கட்டுப்படுத்துவதிலும் இரு அணியினரும் ஏறக்குறைய சரிசமமாக ஆதிக்கம் செலுத்தினர். பிரான்ஸ் வீரர் கலியன் எம்பாப்பே அடித்த பிரமாதமான ஒரு ஷாட்டை போர்ச்சுகல் கோல் கீப்பர் ருய் பாட்ரிசியோ தடுத்து நிறுத்தினார். 31-வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. போர்ச்சுகல் வீரர் டேனிலோ துள்ளிகுதித்து பந்தை தலையால் முட்டி வலைக்குள் திருப்ப முனைந்த போது, அதை பாய்ந்து தடுக்க முயற்சித்த பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிசின் முழங்கை அவரது முகத்தில் வேகமாக இடித்தது. இதனால் கிட்டிய பெனால்டி வாய்ப்பை போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலாக்கினார். பிரான்சுக்கு எதிராக அவர் பதிவு செய்த முதல் கோல் இது தான்.

இதன் பின்னர் பிரான்சுக்கு 45-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கிய கரிம் பெஞ்சிமா, தொடர்ந்து 47-வது நிமிடத்தில் போக்பா தட்டிக்கொடுத்த பந்தையும் வலைக்குள் அனுப்பி அசத்தினார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் முன்னிலை பெற்றது. 60-வது நிமிடத்தில் கோல் பகுதியில் வைத்து பிரான்ஸ் வீரர் ஜூலஸ் கோன்டே பந்தை கையால் கையாண்டதால் போர்ச்சுகலுக்கு மீண்டும் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதையும் ரொனால்டோ லாவகமாக கோலுக்குள் திணித்தார். நடப்பு தொடரில் ரொனால்டோவின் 5-வது கோல் இதுவாகும்.

இரு அணியினரும் ஆக்ரோஷமாகவும், துடிப்புடனும் விளையாடியதால் கால்களை இடறி விடுவது, தள்ளிவிடுவது என்று அடிக்கடி ‘பவுல்’ செய்ததையும் பார்க்க முடிந்தது. இதில் மாட்டிக்கொண்ட பிரான்ஸ் வீரர்கள் 4 பேர் மஞ்சள் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முடிவில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது.

இதே பிரிவில் முனிச் நகரில் மழை சாரலுக்கு மத்தியில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி, ஹங்கேரியை எதிர்கொண்டது. பந்து பெரும்பாலும் ஜெர்மனி (70 சதவீதம்) வசமே சுற்றினாலும், அலை அலையாய் சென்று தாக்குதல் நடத்தினாலும் ஹங்கேரின் தடுப்பு கோட்டையை உடைப்பது பெரும் போராட்டமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் பின்தங்கிய ஜெர்மனியை 84-வது நிமிடத்தில் லியோன் கோரெட்ஸ்கா கோல் அடித்து காப்பாற்றினார். பரபரப்பான இந்த மோதலும் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது.

இந்த பிரிவில் பிரான்ஸ் 5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து 2-வது சுற்றுக்கு (நாக்-அவுட்) முன்னேறியது. தலா 4 புள்ளியை பெற்ற ஜெர்மனி, போர்ச்சுகல் அணிகளும் 2-வது சுற்றை எட்டின. நாக்-அவுட் சுற்றுக்கு வந்துள்ள 16 அணிகளில் இருந்து 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

அடுத்த சுற்றில் பிரான்ஸ் அணி சுவிட்சர்லாந்தையும், போர்ச்சுகல், ‘நம்பர் ஒன்’ அணியான பெல்ஜியத்தையும், ஜெர்மனி அணி இங்கிலாந்தையும் சந்திக்கிறது. நாக்-அவுட் சுற்று நாளை தொடங்குகிறது.

Next Story