ஐரோப்பிய கால்பந்து: கூடுதல் நேரத்தில் சுவீடனை தோற்கடித்து - முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறியது உக்ரைன்


ஐரோப்பிய கால்பந்து: கூடுதல் நேரத்தில் சுவீடனை தோற்கடித்து - முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறியது உக்ரைன்
x
தினத்தந்தி 1 July 2021 6:43 AM GMT (Updated: 1 July 2021 6:43 AM GMT)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் உக்ரைன் அணி கூடுதல் நேரத்தில் சுவீடனை தோற்கடித்து முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறியது.

கிளாஸ்கோ,

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) 11 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய 2-வது சுற்றின் கடைசி ஆட்டத்தில் உக்ரைன்-சுவீடன் அணிகள் சந்தித்தன. ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதிய இரு அணியினரும் தொடக்கம் முதலே கோல் அடிக்க தீவிரம் காட்டினர். 27-வது நிமிடத்தில் உக்ரைன் கேப்டன் யார்மோலென்கோ எதிரணியின் பின்கள வீரர்களை தாண்டி குறுக்காக தூக்கிவிட்ட பந்தை அங்கு நின்ற சக வீரர் ஜின்சென்கோ இடதுகாலால் ஓங்கி உதைத்து கோலாக்கினார். சுவீடன் கோல் கீப்பர் ராபின் ஒல்சன் தடுத்த போதிலும் பந்து அவரது இடது கையில் பட்டு வலைக்குள் புகுந்தது. 29-வது நிமிடத்தில் சுவீடனின் லார்சன் ‘பிரிகிக்’ வாய்ப்பில் இலக்கை நோக்கி அடித்த பந்தை உக்ரைன் கோல் கீப்பர் புஷ்சான் பாய்ந்து விழுந்து தடுத்தார். என்றாலும் இடைவிடாது முயற்சித்த சுவீடன் அணியினர் 43-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினர். இந்த கோலை அந்த அணியின் எமில் போர்ஸ்பெர்க் அடித்தார். நடப்பு தொடரில் அவரது 4-வது கோல் இதுவாகும். இதன் மூலம் ஒரு ஐரோப்பிய தொடரில் அதிக கோல்கள் போட்ட சுவீடன் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

முதல் பாதியில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டிய நிலையில் பிற்பாதியில் இரு அணியினரும் கடுமையாக போராடியும் கோல் வலையை நெருங்க முடியவில்லை. வழக்கமான 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலை நீடித்ததால் கூடுதல் நேரமாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதில் 99-வது நிமிடத்தில் உக்ரைன் வீரர் ஆர்டெம் பெசிடினின் காலை வேகமாக மிதித்த சுவீடனின் மார்கஸ் டேனியல்சன் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் சுவீடன் இறுதி கட்டத்தில் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இந்த சூழலில் கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில்(120-வது நிமிடம்) ஜின்சென்கோ இடது பக்கத்தில் இருந்து தூக்கியடித்த பந்தை கோல் பகுதியில் நின்ற உக்ரைனின் மாற்று ஆட்டக்காரர் ஆர்டெம் டோவ்பைக் அப்படியே தலையால் முட்டி வலைக்குள் அனுப்பினார். அடுத்த வினாடியே உக்ரைன் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பால் அரங்கமே அதிர்ந்தது. ேடாவ்பைக் சர்வதேச போட்டியில் அடித்த முதல் கோல் இது தான். ஒரே நாளில் அந்த நாட்டின் ஹீேராவாகி விட்டார்.

முடிவில் உக்ரைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சுவீடனை விரட்டியடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது. யூரோ கால்பந்து வரலாற்றில் உக்ரைன் அணி கால்இறுதியை எட்டுவது இதுவே முதல் முறையாகும். 3-ந்தேதி நடக்கும் நடக்கும் கால்இறுதியில் அந்த அணி இங்கிலாந்தை சந்திக்கிறது.

Next Story