ஐரோப்பிய கால்பந்து: பெல்ஜியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது இத்தாலி


ஐரோப்பிய கால்பந்து: பெல்ஜியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது இத்தாலி
x
தினத்தந்தி 4 July 2021 2:14 AM GMT (Updated: 2021-07-04T07:44:39+05:30)

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது.

முனிச்,

16-வது ஐரோப்பிய கால்பந்து தொடர் (யூரோ) இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் ஜெர்மனியின் முனிச் நகரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய கால்இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ அணியான பெல்ஜியம், முன்னாள் சாம்பியன் இத்தாலியுடன் மோதியது. பெல்ஜியம் நட்சத்திர வீரர் கெவின் டி புருனே காயத்தில் இருந்து ஓரளவு மீண்டதால் களம் இறங்கினார்.

பலம் வாய்ந்த இரு அணிகள் மோதியதால் ஆரம்பத்தில் இருந்தே ஆட்டம் சூடுபிடித்தது. 13-வது நிமிடத்தில் இத்தாலி வீரர் லியோனர்டோ போனுக்சி கோல் அடித்தார். ஆனால் அது ‘ஆப்-சைடு’ என்று அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள். 22-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் டி புருனே 20 மீட்டர் தூரத்தில் இருந்து உதைத்த பிரமாதமான ஷாட்டை இத்தாலி கோல் கீப்பர் டோனருமா பாய்ந்து ஒற்றைக்கையால் தடுத்து வெளியே தள்ளினார். தொடர்ந்து பெல்ஜியம் முன்னணி வீரர் ரோம்லு லுகாகுவின் முயற்சியையும் அவர் முறியடித்தார். 31-வது நிமிடத்தில் இத்தாலி கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணியின் நிகோலோ பாரெல்லா தன்ைன சுற்றி நின்ற 3 தடுப்பாட்ட வீரர்களுக்கு ‘தண்ணி’ காட்டி விட்டு பந்தை வலைக்குள் செலுத்தினார். 44-வது நிமிடத்தில் இத்தாலியின் ேலாரென்சோ இன்சினேவும் கோல் அடித்து அசத்தினார். முதல்பாதியில் கடைசி நிமிடத்தில் பெல்ஜியத்துக்கு பெனால்டி வாய்ப்பு கிட்டியது. அந்த வாய்ப்பை ரோம்லு லுகாகு ேகாலாக்கினார். நடப்பு தொடரில் அவரது 4-வது கோல் இதுவாகும்.

பிற்பாதியில் பதிலடி கொடுக்க பெல்ஜியம் வீரர்கள் தீவிரம் காட்டினர். என்றாலும் இத்தாலி வீரர்களின் துடிப்புமிக்க ஒருங்கிணைந்த ெசயல்பாட்டுக்கு முன் எதுவும் கைகூடவில்லை.

முடிவில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அரைஇறுதியை எட்டியது. இத்தாலி அணி கடைசியாக ஆடிய 32 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டு வருகிறது. அத்துடன் யூரோ தகுதி சுற்றில் 10 வெற்றி, தற்போதைய தொடரில் 5 வெற்றி என்று இரண்டையும் சேர்த்து தொடர்ச்சியாக 15 வெற்றிகள் குவித்ததும் இதுவரை எந்த அணியும் (இதற்கு முன்பு பெல்ஜியம், ஜெர்மனி இந்த வகையில் தலா 14 வெற்றி) செய்யாத ஒரு சாதனையாகும்.

பெல்ஜியம் நடுகள வீரர் கெவின் டி புருனே கூறுகையில், ‘வெற்றிக்காக நாங்கள் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டோம். அவர்கள் அற்புதமாக கோல் அடித்தனர். இதில் முதல் கோல் எங்களின் தவறு காரணமாக நிகழ்ந்தது. அவர்கள் பந்ைத அதிகமாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதை எங்கள் பக்கம் திருப்ப முடியாமல் போனது வேதனையானது’ என்றார்.

இத்தாலி பயிற்சியாளர் ராபர்ட்டோ மான்சினி கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் எந்த ஒரு தருணத்திலும் பெரிய அளவில் பின்னடைவை சந்திக்கவில்லை. பெல்ஜியம் போன்ற அணிகளை தோற்கடிக்க வேண்டும் என்றால் அணியில் ஒவ்வொருவரும் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமாகும். அது தான் இன்றைய ஆட்டத்தில் நடந்தது’ என்றார்.

இத்தாலி அணி அரைஇறுதி ஆட்டத்தில் வருகிற 7-ந்தேதி ஸ்பெயினை லண்டனில் சந்திக்கிறது. முன்னதாக ஸ்பெயின் அணி கால்இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை பெனால்டி ஷூட்-அவுட்டில் 3-1 என்ற கணக்கில் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story