ஐரோப்பிய கால்பந்தில் பெனால்டி ஷூட்-அவுட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி அணி 2-வது முறையாக ‘சாம்பியன்’


ஐரோப்பிய கால்பந்தில் பெனால்டி ஷூட்-அவுட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி அணி 2-வது முறையாக ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 13 July 2021 12:22 AM GMT (Updated: 13 July 2021 12:22 AM GMT)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

லண்டன், 

24 அணிகள் பங்கேற்ற 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி கடந்த மாதம் 11-ந் தேதி தொடங்கி 11 நாடுகளில் நடந்து வந்தது. இதில் லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இத்தாலி-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2-வது நிமிடத்திலேயே கோல் அடித்தது. அந்த அணியின் கிரன் டிரிப்பெர் கோல் எல்லையை நோக்கி தூக்கியடித்த பந்தை சக நடுகள வீரர் லுக் ஷா இடது காலால் உதைத்து கோலுக்குள் அனுப்பினார். யூரோ இறுதிபோட்டியில் அதிவிரைவில் அடிக்கப்பட்ட கோலாக இது பதிவானது. அத்துடன் லுக் ஷா சர்வதேச போட்டியில் அடித்த முதல் கோலும் இது தான்.

இத்தாலி அணி பதில் கோல் திருப்ப ஆக்ரோஷமாக ஆடியது. அந்த அணி வீரர் பெடரிகோ சீஸா அடித்த ஷாட் கோல் கம்பத்தின் பக்கவாட்டில் சென்று வீணானது. அந்த அணிக்கு கிடைத்த பிரிகிக் வாய்ப்புகளும் சாதகமாக மாறவில்லை. முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

பிற்பாதியில் இத்தாலி அணி தனது தாக்குதல் ஆட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. அந்த அணியின் கட்டுப்பாட்டில் தான் பந்து அதிக நேரம் (61 சதவீதம்) வலம் வந்தது. அந்த அணியின் லோரென்சோ இன்சினே, பெடரிகோ சீஸா ஆகியோர் அடித்த அருமையான ஷாட்களை இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் பிக் போர்ட் அபாரமாக தடுத்து நிறுத்தினார்.

67-வது இடத்தில் இத்தாலி அணி பதில் கோல் திருப்பியது. கார்னரில் இருந்து அந்த அணியின் லோரென்சோ இன்சினே கோல் எல்லையை நோக்கி தூக்கி அடித்த பந்தை சக வீரர் மார்கோ வெராட்டி தலையால் முட்டி கோல் வலையை நோக்கி திருப்பினார். ஆனால் பந்து கம்பத்தில் பட்டு திரும்பியது. அதனை மற்றொரு இத்தாலி வீரர் லியோனர்டோ போனுக்சி அதிரடியாக உதைத்து கோலாக்கினார்.

அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரிகேனை குறிவைத்து எதிரணியினர் மடக்கியதால் அவரால் எதிர்பார்த்தபடி ஜொலிக்க முடியவில்லை. அந்த அணியின் ரஹீம் ஸ்டெர்லிங் அடித்த ஷாட்கள் எதிரணி கோல்கீப்பர் டோனாருமாவின் தடுப்பு அரணை தாண்டவில்லை.

வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் சமநிலை (1-1) வகித்ததால் போட்டியில் முடிவு காண கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அதில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. திரிலிங்கான பெனால்டி ஷூட்டில் இத்தாலி அணி 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

பெனால்டி ஷூட்-அவுட்டில் இங்கிலாந்து அணி தரப்பில் ஹாரி கேன், ஹாரி மேக்குவையர் ஆகியோர் முறையே முதல் 2 வாய்ப்புகளை கோலாக்கினர். 3-வது வாய்ப்பை மார்கஸ் ராஷ்போர்ட் கோல் கம்பத்தில் அடித்து சொதப்பினார். ஜெடோன் சான்சோ, புகாயோ சாகா முறையே அடித்த 4-வது மற்றும் 5-வது வாய்ப்புகளை இத்தாலி கோல்கீப்பர் டோனருமா அற்புதமாக தடுத்து ஹீரோவாக மின்னினார்.

இத்தாலி அணி தரப்பில் 2-வது வாய்ப்பில் ஆந்த்ரே பிலோட்டியும், 5-வது வாய்ப்பில் ஜோர்ஜினோவும் அடித்த பந்தை இங்கிலாந்து கோல்கீப்பர் பிக் போர்ட் சிறப்பாக தடுத்து நிறுத்தினாலும், மற்ற 3 வாய்ப்புகளை இத்தாலி கோலாக்கியதால் அந்த அணிக்கு வெற்றிக்கனி கனிந்தது.

இத்தாலி அணி 2-வது முறையாக யூரோ கோப்பையை சொந்தமாக்கி இருக்கிறது. ஏற்கனவே 1968-ம் ஆண்டில் முதல்முறையாக இந்த கோப்பையை வென்று இருந்த இத்தாலி அணி 53 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சிமுகர்ந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் இத்தாலி அணி தனது கடைசி 34 சர்வதேச போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வீறுநடை போடுகிறது. அதே சமயம் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல கிடைத்த அரிய வாய்ப்பை கோட்டை விட்டது.

யூரோ கோப்பை இறுதிப்போட்டி பெனால்டி ஷூட்-அவுட்டுக்கு நகர்ந்தது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 1976-ம் ஆண்டில் செக்கோஸ்லோவக்கியா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி இருந்தது. இத்தாலி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த கோல்கீப்பர் டோனருமா இந்த போட்டி தொடரின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 கோல்கள் அடித்த போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அதிக கோல் அடித்தவருக்கான தங்க ஷூவை தனதாக்கினார்.

சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணி ரூ.89 கோடி பரிசுத்தொகையுடன், போட்டி கட்டணம், லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று வெற்றி என எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம் ரூ.300 கோடியை அள்ளியது. 2-வது இடம் பெற்ற இங்கிலாந்து அணி ரூ.62 கோடி பரிசுத்தொகையுடன், போட்டி கட்டணம், லீக், நாக்-அவுட் சுற்று வெற்றிகளையும் சேர்த்து மொத்தமாக ரூ.268 கோடியை பெற்றது.

மகுடம் சூடிய இத்தாலி அணியினர் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்த வெற்றியால் இத்தாலி நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. தெருக்களில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் என்று அமர்க்களப்படுத்தினார்கள். அந்த நாட்டு பத்திரிகைகள் இத்தாலி அணிக்கு புகழாரம் சூடி இருக்கின்றன. உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணியினர் சோகத்துடன் விடைபெற்றனர். பெனால்டி ஷூட்டில் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட இங்கிலாந்து வீரர் சாகா தேம்பி, தேம்பி அழுதார். அவரை கேப்டன் ஹாரிகேன் ஆரத்தழுவி ஆறுதல்படுத்தினார்.

Next Story