இந்தியா-நேபாளம் இடையிலான சர்வதேச பெண்கள் நட்புறவு கால்பந்து: 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா'


இந்தியா-நேபாளம் இடையிலான சர்வதேச பெண்கள் நட்புறவு கால்பந்து: 2-2 என்ற கோல் கணக்கில் டிரா
x

image courtesy: Indian Football Team twitter

சென்னையில் நடைபெற்ற இந்தியா-நேபாளம் அணிகளுக்கு இடையிலான சர்வதேச பெண்கள் நட்புறவு கால்பந்து போட்டி டிராவில் முடிந்தது.

சென்னை,

இந்தியா-நேபாள பெண்கள் அணிகள் இடையிலான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் அனுமதியுடன் தமிழ்நாடு கால்பந்து சங்கம் இந்த போட்டியை நடத்துகிறது.

12 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக சர்வதேச கால்பந்து போட்டி சென்னையில் அரங்கேறுகிறது. அத்துடன் சர்வதேச பெண்கள் கால்பந்து போட்டி சென்னையில் நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.

இந்த போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இந்துமதி கதிரேசன் தலைமையிலான இந்திய அணியும், அஞ்சிலா சுப்பா தலைமையிலான நேபாளம் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி சார்பில் சவுமியா ஆட்டத்தின் 56-வது நிமிடத்திலும் இந்துமதி ஆட்டத்தின் 68-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதையடுத்து இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்த நிலையில் நேபாளம் அணி சார்பில் சபித்ரா ஆட்டத்தின் 90-வது நிமிடத்திலும் 90+2 வது நிமிடத்திலும் என இரண்டு கோல்கள் அடித்தார். இதையடுத்து ஆட்டநேர முடிவில் இந்தியா-நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மற்றொரு போட்டி வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில், திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி மற்றும் தமிழ்நாடு கால்பந்து சங்க நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.


Next Story