ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
x
தினத்தந்தி 21 Oct 2018 10:45 PM GMT (Updated: 21 Oct 2018 8:22 PM GMT)

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

5-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆண்கள் ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் ஓமனை 11-0 என்ற கோல் கணக்கில் பந்தாடிய நடப்பு சாம்பியனான இந்திய அணி, நேற்று முன்தினம் இரவு தனது 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை எதிர்கொண்டது.

முதலாவது நிமிடத்திலேயே பாகிஸ்தானுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்தினார். ஆனாலும் திரும்பி வந்த பந்தை பாகிஸ்தானின் முகமது இர்பான் ஜூனியர் கோலாக்கி அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு எழுச்சி பெற்ற இந்திய வீரர்கள் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டினர். கேப்டன் மன்பிரீத்சிங் 24-வது நிமிடத்திலும், மன்தீப்சிங் 31-வது நிமிடத்திலும், தில்பிரீத்சிங் 42-வது நிமிடத்திலும் கோல் போட்டு அசத்தினர்.

சரிவில் இருந்து மீள்வதற்கு பாகிஸ்தான் வீரர்கள் போராடிய போதிலும் இந்திய பின்கள வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அவர்களின் முயற்சிகளை முறியடித்தனர். முடிவில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேசுக்கு இது 200-வது ஆட்டம் என்பது கவனிக்கத்தக்கது. இதையும் சேர்த்து பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக ஆடிய 11 ஆட்டங்களில் இந்திய அணி தோல்வி கண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story