இந்திய அணியின் பயிற்சியாளர் ‘நடுவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ - சர்வதேச ஆக்கி சம்மேளனம் கருத்து


இந்திய அணியின் பயிற்சியாளர் ‘நடுவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ - சர்வதேச ஆக்கி சம்மேளனம் கருத்து
x
தினத்தந்தி 15 Dec 2018 10:15 PM GMT (Updated: 15 Dec 2018 7:35 PM GMT)

இந்திய அணியின் பயிற்சியாளர் நடுவர்களை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என சர்வதேச ஆக்கி சம்மேளனம் கருத்து தெரிவித்துள்ளது.

புவனேஸ்வரம்,

உலக கோப்பை ஆக்கி போட்டியின் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. தோல்விக்கு பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கருத்து தெரிவிக்கையில், ‘நடுவர்களின் மோசமான முடிவே இந்திய அணி தோல்விக்கு காரணம்’ என்று குறிப்பிட்டார்.

இது குறித்து சர்வதேச ஆக்கி சம்மேளன தலைமை செயல் அதிகாரி தியரி வெல்லிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறுகையில், ‘இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளர் நடுவர்களின் முடிவு குறித்து குறை சொல்லி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடுவர்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்து பரிசீலனை செய்வோம். நீங்கள் தோல்வி அடைந்தால் அதனை ஏற்றுக்கொண்டு கடந்து செல்வது தான் சரியானதாகும்’ என்றார். அவர் மேலும் பேசுகையில், ‘அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஒரு அணியில் 5 பேர் இடம் பெறும் ஆக்கி போட்டிகள் நடத்தப்படும். தற்போது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு முதல் இந்த போட்டி 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும். விரைவில் அணிகளுக்கு ஒரே மாதிரியான புதிய தர வரிசை முறை அமல்படுத்தப்படும்’ என்று தெரிவித்தார்.

Next Story