ஹாக்கி

புதிய பயிற்சியாளர்... புதிய நம்பிக்கை + "||" + New coach

புதிய பயிற்சியாளர்... புதிய நம்பிக்கை

புதிய பயிற்சியாளர்... புதிய நம்பிக்கை
இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார், ஆஸ்திரேலியரான கிரஹாம் ரீட்.
54 வயதாகும் கிரஹாமுக்கு சொல்லிக்கொள்ளும்படியான சாதனைகள் உண்டு.

அவற்றில், 1992 பார்சிலோனா ஒலிம்பிக் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகித்தவர் என்பதும், 1984, 1985 மற்றும் 1989, 1990-ல் அடுத்தடுத்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் வாகை சூடிய ஆஸ்திரேலியப் படையில் முக்கிய இடம்பிடித்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கவை.

தான் ஆடிய காலங்களில் தற்காப்பு மற்றும் நடுக்கள வீரராகத் திகழ்ந்த கிரஹாம், இந்திய அணியில் புத்துணர்வைப் பாய்ச்சுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதிரடி ஆட்ட பாணிக்குப் பெயர் போன ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறார் என்பதால்தான் அந்த நம்பிக்கை.

‘‘ஒரு வீரராகவும், பயிற்சியாளராகவும் வெற்றிகரமாகத் திகழ்ந்தவர், கிரஹாம் ரீட். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கை நோக்கிய இந்திய அணியின் பயணத்தில் கிரஹாம் பெரிதும் உதவுவார் என்று நம்புகிறோம்’’ என்கிறார், ஆக்கி இந்தியா அமைப்பின் தலைவர் முகமது முஷ்டாக் அகமது.

கிரஹாம் ரீடிடமும் உற்சாகம் தெரிகிறது.

‘‘இந்திய ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது பெரிய அங்கீகாரம், கவுரவம். ஆக்கியில் இந்தியா வுக்கு இணையான வரலாறு கொண்டது எந்த நாடும் இல்லை. நான் எதிரணியில் இருந்தபோதும் இந்தியா விளையாடுவதை எப்போதும் ரசித்துப் பார்த்து வந்திருக்கிறேன். இந்தியா தற்போது விளையாடிவரும் தாக்குதல் பாணி ஆட்டம், ஆஸ்திரேலிய பாணியுடன் ஒத்துப்போவது. இந்தியா டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை எதிர்நோக்கியுள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து செயல்பட மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். தற்போது நான் இந்திய ஆக்கி அணியின் முகாம் நடைபெறும் பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்திருக்கிறேன். விரைவில் என் மனைவியும் இங்கு வரவிருக்கிறார். தனிப்பட்ட விதத்தில், நாங்கள் இங்கு வசிப்பதையும் ரசிப்போம் என்று எண்ணுகிறேன்’’ என்கிறார்.

கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நெதர்லாந்து அணியில் உதவிப் பயிற்சியாளராக இருந்திருக்கிறார், கிரஹாம் ரீட்.

இவர் இந்திய அணியை எங்கே இட்டுச்செல்கிறார் என்று நாமும் பார்ப்போம்.