அகில இந்திய ஆக்கி: இந்தியன் ஆயில் அணி மீண்டும் ‘சாம்பியன்’


அகில இந்திய ஆக்கி: இந்தியன் ஆயில் அணி மீண்டும் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 8 Sep 2019 11:41 PM GMT (Updated: 8 Sep 2019 11:41 PM GMT)

அகில இந்திய ஆக்கி போட்டியில், இந்தியன் ஆயில் அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை,

10 அணிகள் இடையிலான 93-வது எம்.சி.சி.-முருகப்பா தங்கக் கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியன் ஆயில் நிறுவனம், பஞ்சாப் நேஷனல் வங்கி அணியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த மோதலில் இந்தியன் ஆயில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை மீண்டும் கைப்பற்றியது. இந்தியன் ஆயில் அணியில் குர்ஜிந்தர் சிங் 2 கோலும், தீபக் தாகூர் ஒரு கோலும் அடித்தனர்.

கோப்பையை வென்ற இந்தியன் ஆயில் அணிக்கு ரூ.6 லட்சமும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.3½ லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. சிறந்த முன்கள வீரராக அப்பான் யூசுப் (இந்தியன் ஆயில்), சிறந்த நடுகள வீரராக பர்தீப் மோர் (மத்திய தலைமை செயலகம்), சிறந்த கோல் கீப்பராக ஜஸ்பிர் சிங் (பஞ்சாப் நேஷனல் வங்கி) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், உயர்த்தரமான சைக்கிளும் வழங்கப்பட்டது. பரிசுகளை முருகப்பா குரூப் சேர்மன் எம்.எம்.முருகப்பன் வழங்கினார்.


Next Story