ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்


ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 28 Nov 2021 12:18 AM GMT (Updated: 28 Nov 2021 12:18 AM GMT)

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியில் போலந்தை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்த இந்திய அணி கால்இறுதிக்கு முன்னேறியது.

புவனேஸ்வர், 

12-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

இதில் ‘பி’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ் அணி 11-1 என்ற கோல் கணக்கில் கனடாவை துவம்சம் செய்தது.

இதே பிரிவில் இரவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா 8-2 என்ற கோல் கணக்கில் போலந்தை ஊதித்தள்ளியது. இந்திய அணி தரப்பில் துணை கேப்டன் சஞ்சய் (4-வது, 58-வது நிமிடம்), அரஜீத் சிங் (8-வது, 60-வது நிமிடம்), சுதீப் சிர்மாகோ (24-வது, 40-வது நிமிடம்) தலா 2 கோலும், உத்தம் சிங் (34-வது நிமிடம்), ஷர்தானந்த் திவாரி (38-வது நிமிடம்) தலா ஒரு கோலும் அடித்தனர். 

இந்த பிரிவில் பிரான்ஸ் (3 வெற்றி) 9 புள்ளிகளுடன் முதலிடத்தையும், இந்தியா (2 வெற்றி, ஒரு தோல்வி) 6 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்து கால்இறுதியை எட்டின. கால்இறுதியில் இந்திய அணி, பெல்ஜியத்தை சந்திக்கிறது.

முன்னதாக ‘ஏ’ பிரிவில் நடந்த கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் மலேசியா 4-3 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவையும், பெல்ஜியம் 3-0 என்ற கோல் கணக்கில் சிலியையும் தோற்கடித்தது. இந்த பிரிவில் 2 வெற்றி, ஒரு டிராவுடன் பெல்ஜியம், மலேசியா அணிகள் தலா 7 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. கோல் வித்தியாசம் அடிப்படையில் பெல்ஜியம் முதலிடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பெற்று கால்இறுதிக்குள் கால் பதித்தன.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் தென்கொரியா-ஸ்பெயின் (பகல் 12 மணி), நெதர்லாந்து-அமெரிக்கா (பிற்பகல் 2.30 மணி), பாகிஸ்தான்-அர்ஜென்டினா (மாலை 5 மணி) ஜெர்மனி-எகிப்து (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story