ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி: தாய்லாந்தை பந்தாடியது இந்தியா


ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி: தாய்லாந்தை பந்தாடியது இந்தியா
x
தினத்தந்தி 5 Dec 2021 7:18 PM GMT (Updated: 5 Dec 2021 7:18 PM GMT)

ஆசிய கோப்பை பெண்கள் ஆக்கி போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

டாங்கே,

6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி தென்கொரியாவின் டாங்கே நகரில் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான தென்கொரியா, இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா, தாய்லாந்து ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தாய்லாந்துடன் நேற்று மோதியது. இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கோல்மழை பொழிந்த இந்தியா 13-0 என்ற கணக்கில் தாய்லாந்தை துவம்சம் செய்தது. குர்ஜித் கவுர் 5 கோல்கள் அடித்து அசத்தினார். மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை தோற்கடித்தது.

மலேசிய அணியில் வீராங்கனை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததால் அந்த அணி தனிமைப்படுத்தப்பட்டது. அதனால் அந்த அணியால் முதல் இரு நாட்கள் விளையாட இயலாது என்று ஆசிய ஆக்கி சம்மேளனம் கூறியுள்ளது. போட்டி அட்டவணைப்படி, இந்திய அணி இன்று மலேசியாவுடன் மோத வேண்டும். கொரோனா பிரச்சினையால் இந்த ஆட்டம் நடக்காது. இந்திய அணி அடுத்த லீக்கில் 8-ந்தேதி தென்கொரியாவை எதிர்கொள்கிறது.

Next Story