ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று: தொடக்க ஆட்டத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வி


ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி தகுதி சுற்று: தொடக்க ஆட்டத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 13 Jan 2024 8:29 PM GMT (Updated: 13 Jan 2024 8:30 PM GMT)

இந்திய அணி இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் (இரவு 7.30 மணி) மோதுகிறது.

ராஞ்சி,

பாரீசில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஆக்கியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. பெண்கள் ஆக்கி போட்டிக்கு பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்பட 6 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 6 அணிகள் 2 தகுதி சுற்று மூலம் தேர்வு செய்யப்படுகின்றன. இதன் ஒரு தகுதி சுற்று போட்டி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நேற்று தொடங்கியது. 19-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி காணும்.

இந்த போட்டியின் தொடக்க லீக் ஆட்டத்தில் ஜெர்மனி-சிலி (ஏ பிரிவு) அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வலுவான ஜெர்மனி அணி 3-0 என்ற கோல் கணக்கில் தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் சிலியை எளிதில் தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. இதேபிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் ஆசிய சாம்பியனான ஜப்பான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செக்குடியரசை வென்றது. 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள சவிதா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் 24-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய அணி பந்தை தனது கட்டுப்பாட்டில் அதிகம் வைத்து இருந்தாலும் கோல் எதுவும் அடிக்க இயலவில்லை. கடுமையான நெருக்கடி கொடுத்தாலும் அமெரிக்க அணியின் தற்காப்பு அரணை கடைசி வரை தகர்க்க முடியவில்லை. 7 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்தியா வீணடித்தது. முடிவில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. அமெரிக்க அணி வீராங்கனை அபிகைல் தமெர் 16-வது நிமிடத்தில் அடித்த கோல் வெற்றியை தீர்மானிப்பதாக அமைந்தது.

முன்னதாக இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை தோற்கடித்தது.

இந்திய அணி இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் (இரவு 7.30 மணி) மோதுகிறது. மற்ற லீக் ஆட்டங்களில் சிலி-செக்குடியரசு (பகல் 12 மணி), ஜப்பான்-ஜெர்மனி (பிற்பகல் 2.30 மணி), அமெரிக்கா-இத்தாலி (மாலை 5 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story