துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 26 Feb 2018 10:24 PM GMT (Updated: 26 Feb 2018 10:24 PM GMT)

* இங்கிலாந்தில் நடந்த தொழில்முறை ஹெவிவெயிட் குத்துச்சண்டை போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த ஸ்காட் வெஸ்ட்கார்த்-டெக் ஸ்பெல்மான் ஆகியோர் மோதினார்கள். இதில் புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்ற 31 வயதான ஸ்காட் வெஸ்ட்கார்த் போட்டி முடிந்ததும் களைப்பாக காணப்பட்டார். உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.

* தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் இந்த வாரம் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் முடிந்ததும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ளார். இது குறித்து 33 வயதான மோர்னே மோர்கல் கருத்து தெரிவிக்கையில், ‘ஓய்வு பெறுவது என்பது கடினமான முடிவாகும். புதிய அத்தியாயம் தொடங்க இது சரியான தருணம் என்று கருதுகிறேன். எனது குடும்பத்தினரை விடுத்து அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடுவது எனக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்னும் நிறைய கிரிக்கெட் எனக்கு எஞ்சி இருப்பதாக கருதுகிறேன். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடரில் தென்ஆப்பிரிக்க அணி வெல்வதற்கு உதவுவதில் தான் எனது முழு கவனமும் உள்ளது’ என்று கூறினார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தனது சுயசரிதை புத்தகத்தில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பலை (ஆஸ்திரேலியா) பகிரங்கமாக சாடியுள்ளார். அதில் கங்குலி கூறியிருப்பதாவது:- கிரேக் சேப்பலின் ஆழமான கிரிக்கெட் அறிவு என்னை ஈர்த்தது. கிரேக் சேப்பலால் நமது அணியை நம்பர் ஒன் இடத்துக்கு உயர்த்த முடியும் என்று நம்பினேன். எனது இந்த தனிப்பட்ட கருத்தை அப்போதைய இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் டால்மியாவிடம் தெரிவித்தேன். ஆனால் சுனில் கவாஸ்கர் உள்பட சிலர் கிரேக் சேப்பலை வைத்து கொண்டு அணியை சரியாக வழிநடத்த முடியாது. அவரது கடந்த கால பயிற்சி திட்டங்கள் சிறந்ததாக இல்லை என்று என்னிடம் தெரிவித்தனர். இந்த நிலையில் தான் டால்மியா என்னை அவசர சந்திப்புக்காக வீட்டுக்கு அழைத்தார். கிரேக் சேப்பலின் சகோதரர் இயான் சேப்பால் கூட இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வுக்கு கிரேக் சேப்பல் சரிப்பட்டு வரமாட்டார் என்று கூறியதாக டால்மியா என்னிடம் தெரிவித்தார். ஆனால் எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு உள்ளூணர்வு அடிப்படையில் நான் செயல்பட்டேன். பின்பு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆஸ்திரேலிய அணியை முறியடித்த என்னால் அதன் குடிமகன் ஒருவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

* பீகார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்ய வர்மா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கிரிக்கெட் ஆட்டத்தின் வளர்ச்சிக்காவும், பீகார் கிரிக்கெட் வீரர்களின் நலனுக்காகவும் தான் 2005-ம் ஆண்டு முதல் நான் போராடி வருகிறேன். பீகார் கிரிக்கெட் சங்கத்தின் பிளவுக்கு காரணமாக இருந்த அமிதாப் சவுத்ரி ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கத்துக்கு தலைவராகி அதற்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அங்கீகாரத்தையும் முறைகேடாக பெற்றார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு செயலாளராக இருக்கும் அமிதாப் சவுத்ரி தனது சுயநலத்துக்காகவே பதவியை பயன்படுத்தி வருகிறார். இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் சிறந்த நிர்வாகி. அவர் கிரிக்கெட் வளர்ச்சிக்கும், வீரர்களின் நலனுக்கும் நல்ல பல காரியங்களை செய்து இருக்கிறார். நான் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராகவே வழக்கு தொடர்ந்தேன். என்.சீனிவாசனை எதிரியாக நினைக்கவில்லை. என்.சீனிவாசன் நல்ல குணத்தை புரியாமல் சில சமயங்களில் செயல்பட்டு இருக்கிறேன். அதனை தவறு என்று தற்போது புரிந்து விட்டேன். பீகார் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், அதன் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்க இருக்கும் எங்கள் மாநிலத்தை சேர்ந்த டோனிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். என்.சீனிவாசனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சந்திப்பேன்’ என்று தெரிவித்தார். அப்போது ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க பொருளாளர் நரேஷ் மக்கானி உடனிருந்தார்.

* 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் டெல்லியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 84-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி.-மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் எப்.சி.புனே சிட்டி அணி 0-4 என்ற கோல் கணக்கில் எப்.சி.கோவா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டாலும் அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. புனே அணி வருகிற 2-ந் தேதி நடைபெறும் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தின் முடிவுக்காக காத்து இருக்க வேண்டியதில்லை. பெங்களூரு அணி 12 வெற்றி, ஒரு டிரா, 4 தோல்வியுடன் 37 புள்ளிகள் பெற்று முதல் அணியாக அரைஇறுதிக்கு தகுதி பெற்று இருந்தது. புனே அணி 17 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 2 டிரா, 6 தோல்வியுடன் 29 புள்ளிகள் பெற்று 2-வது அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. தனக்கு போட்டியாக விளங்கும் அணிகளான சென்னை, மும்பை, ஜாம்ஷெட்பூருக்கு இணையாக புனே அணி புள்ளி பெற்றாலும் முந்தைய லீக் ஆட்டங்களில் புனே அணி அந்த அணிகளை வீழ்த்தி இருப்பதால் அரைஇறுதிக்கு தகுதி பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது.

Next Story