துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 1 Jun 2018 11:15 PM GMT (Updated: 1 Jun 2018 10:05 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும்.


* ரஷியாவில் வருகிற 14-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று கருத்து கணிப்பு முடிவில் தகவல் வெளியாகி இருக்கிறது. சர்வதேச அளவில் பங்கு சந்தை நிபுணர்களிடம் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் அதிகம் பேர் ஜெர்மனி அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசில் அணிக்கு அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அர்ஜென்டினா அணி வீரர் லயோனஸ் மெஸ்சி அதிக கோல்கள் அடிப்பார் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.

* கத்தாரை சேர்ந்த அல் ஜஸீரா டி.வி. நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு செய்தியில் சில டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ‘ஸ்பாட் பிக்சிங்’, ‘பிட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்திருப்பதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. இந்தியா-இலங்கை (காலே, ஜூலை, 2017-ம்ஆண்டு), இந்தியா-ஆஸ்திரேலியா( ராஞ்சி, மார்ச், 2017), இந்தியா-இங்கிலாந்து (சென்னை, டிசம்பர், 2016) ஆகிய டெஸ்ட் போட்டிகளின் போது ஆடுகள பராமரிப்பாளரை சூதாட்ட தரகர்கள் அணுகி தங்களுக்கு ஏற்ப ஆடுகளத் தன்மையை மாற்றி சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், தங்களது ரகசிய ஆபரேஷனில் இந்த விஷயங்கள் தெரிய வந்திருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியிருந்தது. மேலும் சில ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. மும்பை முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் மோரிஸ், ஆடுகளத்தன்மையை மாற்றுவதற்கான வேலையை செய்ததாகவும் அந்த நிறுவனம் கூறியது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘சூதாட்ட புகார் குறித்து முழுமையான, நியாயமான விசாரணையை நாங்கள் நடத்த தயாராக இருக்கிறோம். சூதாட்டம் குறித்து தங்களிடம் உள்ள முழு தகவல்களையும் அல் ஜஸீரா டி.வி. நிறுவனம் கொடுத்து உதவினால் எங்களது விசாரணைக்கு உதவிகரமாக இருக்கும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று மத்திய, மாநில அரசுகள் மறுத்ததால் 2009-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மட்டும் தென்ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அப்போது அன்னிய செலாவணி பரிமாற்ற மேலாண்மை சட்டத்தை மீறி இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.243 கோடிக்கு பண பரிமாற்றம் செய்து இருப்பதை மத்திய அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. இதற்காக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு தனியாக வங்கியில் புதிய கணக்கு தொடங்கி அந்த கணக்குக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பணத்தை மாற்றம் செய்து செலவிட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய மத்திய அமலாக்கத்துறை இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் அதன் நிர்வாகிகள், பண மாற்றத்துக்கு உதவிய வங்கி அதிகாரிகள் என அனைவருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.121 கோடியை அபராதமாக விதித்துள்ளது. இதில் அதிகபட்சமாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.82.66 கோடி அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.

* இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான இரு தரப்பு கிரிக்கெட் உறவுகள் குறித்து ஆலோசிக்க ஆப்கானிஸ்தான் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி அளித்த ஒரு பேட்டியில், ‘வருங்காலங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் வெளிநாட்டு அணிகள், ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாட வழிவகை செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

* ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் ஏற்கனவே உள்ள 12 அணிகளுடன் மேலும் 4 அணிகள் புதிதாக சேர்க்கப்படுகின்றன. ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் 13-வது மற்றும் 14-வது அணிகளாக இந்த வரிசையில் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் 4 சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடிய பிறகு நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இந்த தரவரிசை பட்டியலில் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 அணிகளும் சமீபத்தில் ஒருநாள் போட்டி அந்தஸ்தை பெற்று இருந்தன.

* ரஷியாவில் அரங்கேற இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான பெரு அணியின் கேப்டன் பாலோ குர்ரேரோ, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த உலக கோப்பை தகுதி சுற்றில் அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையின் போது கோகைன் என்னும் போதை பொருளை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் தொடர்ந்த வழக்கில் பாலோ குர்ரேரோவுக்கு 14 மாதம் தடை விதித்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் பாலோ குர்ரேரோவுக்கு விதித்த தடையை தற்காலிகமாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட முடியும்.

* சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து மராட்டிய மாநிலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சூதாட்ட தரகர் சோனு ஜலான் மற்றும் 3 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சூதாட்ட தரகர் சோனு ஜலானுக்கும், இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ் கானுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாகின. இது குறித்த விசாரணைக்கு ஆஜராகும் படி, தானே போலீசார், அர்பாஸ் கானுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

Next Story