பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி சிந்து, ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் 3–வது சுற்றுக்கு தகுதி + "||" + World Badminton Competition Sindhu, Srikanth, Sai Praneeth Qualifying for the 3rd round

உலக பேட்மிண்டன் போட்டி சிந்து, ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் 3–வது சுற்றுக்கு தகுதி

உலக பேட்மிண்டன் போட்டி சிந்து, ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் 3–வது சுற்றுக்கு தகுதி
உலக பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த 2–வது சுற்று ஆட்டங்களில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் ஆகியோர் வெற்றி பெற்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

நான்ஜிங்,

உலக பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடந்த 2–வது சுற்று ஆட்டங்களில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, வீரர்கள் ஸ்ரீகாந்த், சாய் பிரனீத் ஆகியோர் வெற்றி பெற்று 3–வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

3–வது சுற்றில் சிந்து

24–வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நான்ஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21–14, 21–9 என்ற நேர்செட்டில் 41–ம் நிலை வீராங்கனை பிட்ரியானியை (இந்தோனேஷியா) வீழ்த்தி 3–வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றிக்கு அவருக்கு 35 நிமிடம் தேவைப்பட்டது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 6–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21–15, 12–21, 21–14 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் பாப்லோ அபியானை வீழ்த்தி 3–வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் 1 மணி 2 நிமிடம் நீடித்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரனாய் 21–8, 16–21, 15–21 என்ற செட் கணக்கில் பிரேசில் வீரர் கோயல்கோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

சாய் பிரனீத் வெற்றி

இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21–18, 21–11 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீரர் லூயிஸ் என்ரிக்கை விரட்டியடித்து 3–வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 17–21, 14–21 என்ற நேர்செட்டில் 2 முறை ஒலிம்பிக் சாம்பியனும், 5 முறை உலக சாம்பியனுமான சீனாவின் லின் டானிடம் தோல்வி கண்டு நடையை கட்டினார். இந்த ஆட்டம் 45 நிமிட நேரம் நடந்தது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கி ரெட்டி–சிராக் ஷெட்டி, மனு அட்ரி–சுமீத் ரெட்டி ஜோடிகள் தோல்வி கண்டு நடையை கட்டியது. பெண்கள் இரட்டையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த அஸ்வினி பொன்னப்பா–சிக்கி ரெட்டி இணை தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது.