மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டி - மான்ட்போர்ட் பள்ளியில் நடந்தது


மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டி - மான்ட்போர்ட் பள்ளியில் நடந்தது
x
தினத்தந்தி 1 Dec 2018 10:58 PM GMT (Updated: 1 Dec 2018 10:58 PM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த விளையாட்டு போட்டிகள் மான்ட்போர்ட் பள்ளியில் நடந்தது.

சென்னை,

சென்னை பரங்கிமலையில் உள்ள மான்ட்போர்ட் மெட்ரிகுலேசன் பள்ளியில், மான்ட்போர்ட் சமூக வளர்ச்சி மையத்தின் ஆதரவுடன் 9-வது ‘ஒருங்கிணைந்த விளையாட்டு’ என்ற பெயரில் விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. இதில் மாற்றுத்திறனாளி மற்றும் மனவளர்ச்சி குன்றிய 200 பேர் ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர். இதையொட்டி காலையில் அணிவகுப்புடன் போட்டிக்கான தீபம் ஏற்றப்பட்டது. நடிகர் கிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அருட்சகோதரர்கள் பள்ளி முதல்வர் கே.கே.தாமஸ், மான்ட் போர்ட் சமூக வளர்ச்சி மைய இயக்குனர் ஜோசப் லூயிஸ், நிகழ்ச்சி இயக்குனர் மேத்யூ மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டப்பந்தயம், வீல்சேர் பந்தயம், பந்து எறிதல், கால்பந்து என பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. மாற்றுத் திறனாளிகளுடன் மான்ட்போர்ட் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 200 பேர் கைகோர்த்தனர். அதாவது ஒவ்வொரு பந்தயத்திலும் சாதாரண மாணவர்கள் அவர்களது கையை பிடித்துக் கொண்டும், பின்னால் ஓடிச் சென்றும் ஊக்கப்படுத்தியதோடு இலக்கை நோக்கி பயணிக்க வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.

சாதாரண பள்ளி குழந்தைகளுக்கும், மாற்றுத்திறன் படைத்த சிறப்பு குழந்தைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை களைந்து அனைவரும் ஒன்றே என்ற மனப்பான்மையை உருவாக்கும் நோக்கில் இந்த போட்டி நடத்தப்பட்டது. 200 மாணவர்களும், மாற்றுத் திறனாளிகளுடன் தங்களது மதிய உணவை பகிர்ந்து கொண்டது சிறப்பு அம்சமாகும். மாலையில் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.


Next Story