பிற விளையாட்டு

புரோ கபடி: பாட்னா–பெங்களூரு ஆட்டம் ‘டை’ + "||" + Pro Kabaddi: Patna-Bengaluru match 'die'

புரோ கபடி: பாட்னா–பெங்களூரு ஆட்டம் ‘டை’

புரோ கபடி: பாட்னா–பெங்களூரு ஆட்டம் ‘டை’
புரோ கபடியில் பாட்னா–பெங்களூரு அணிகள் இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.

பஞ்ச்குலா, 

புரோ கபடியில் பாட்னா–பெங்களூரு அணிகள் இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் ‘டை’யில் முடிந்தது.

சமனில் முடிந்த ஆட்டம்

12 அணிகள் இடையிலான 6–வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கி வரும் இந்த கபடி திருவிழாவில் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நேற்றிரவு நடந்த 119–வது லீக் ஆட்டத்தில் (பி பிரிவு) நடப்பு சாம்பியன் பாட்னா பைரட்ஸ் அணி, பெங்களூரு புல்சை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணி முதல் பாதியில் 20–11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. பிற்பாதியில் பாட்னா அணி சரிவில் இருந்து ஓரளவு மீண்டது. கடைசி நிமிடத்தில் பாட்னா வீரர் விகாஷ் ஜக்லன், டேக்கிள்ஸ் மற்றும் ரைடு மூலம் 3 புள்ளிகள் எடுத்து தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். பரபரப்பான இந்த ஆட்டம் 40–40 என்ற புள்ளி கணக்கில் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டையில் (சமன்) முடிந்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக 21 முறை ரைடுக்கு சென்ற ரோகித் குமார் 15 புள்ளிகள் சேகரித்தார். பாட்னா கேப்டன் பர்தீப் நார்வல் 17 புள்ளிகள் திரட்டினார். பெங்களூரு அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. இன்னும் 2 ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் பாட்னா அணி 55 புள்ளிகளுடன் (9 வெற்றி, 9 தோல்வி, 2 சமன்) அடுத்த சுற்று வாய்ப்பை நெருங்கியுள்ளது.

குஜராத் வெற்றி

மற்றொரு ஆட்டத்தில் (ஏ பிரிவு) குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 33–31 என்ற புள்ளி கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்து திரில் வெற்றியை ருசித்தது. 21–வது லீக்கில் ஆடிய குஜராத் அணி 16 வெற்றி, 3 தோல்வி, 2 சமன் என்று 88 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது. ஜெய்ப்பூர் அணிக்கு இது 12–வது தோல்வியாகும்.

இன்றைய லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்–தபாங் டெல்லி (இரவு 8 மணி) அணிகள் சந்திக்கின்றன.