துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 21 Dec 2018 9:00 PM GMT (Updated: 21 Dec 2018 8:31 PM GMT)

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மிசோரம்-மேகாலயா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மேகாலயாவில் உள்ள ஷில்லாங் நகரில் நடந்தது.

* ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மிசோரம்-மேகாலயா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மேகாலயாவில் உள்ள ஷில்லாங் நகரில் நடந்தது. இதில் முதலில் ஆடிய மிசோரம் அணி முதல் இன்னிங்சில் 86 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய மேகாலயா அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்து இருந்தது. 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய மேகாலயா அணி முதல் இன்னிங்சில் 95.4 ஓவர்களில் 510 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக யோகேஷ் நாகர் 144 ரன்கள் எடுத்தார். 424 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மிசோரம் அணி 38.3 ஓவர்களில் 100 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் மேகாலயா அணி இன்னிங்ஸ் மற்றும் 324 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

* கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் ஜனவரி 14-ந் தேதி தொடங்குகிறது. தற்போது கடைசி செட்டில் போட்டியாளர்கள் இருவரும் சமநிலையில் தொடர்ந்து நீடித்தால் ஆட்டம் மணிக்கணக்கில் இழுத்தடிக்கும் நிலை உள்ளது. கடைசி செட் ஆட்டம் நீண்ட நேரம் நீடிப்பதை முடிவுக்கு கொண்டு வர கடைசி செட்டில் சூப்பர் டைபிரேக்கர் முறை அமல்படுத்தப்படுகிறது. இதன்படி இனிமேல் கடைசி செட்டில் இரு வீரர்களும் 6-6 என்ற சமநிலையை எட்டியதும், சூப்பர் டைபிரேக்கர் முறை அமல்படுத்தப்படும். இதில் எந்த வீரர் முதலில் 10 புள்ளியை பெறுகிறாரோ? அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்த புதிய டைபிரேக்கர் முறை ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என எல்லா பிரிவு ஆட்டங்களுக்கும் பொருந்தும்.

* உலக கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஜூன் 14-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை ரஷியாவில் நடந்தது. இந்த போட்டியை டெலிவிஷன் மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் 350 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். இந்த தகவலை சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) தெரிவித்துள்ளது.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கொல்கத்தாவில் நடந்த ஒரு பள்ளி விழாவில் பேசுகையில், ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை இன்னும் இந்திய அணியால் வெல்ல முடியும். ஆனால் இந்த அணியினர் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்தே இது சாத்தியமாகும். எல்லா வீரர்களும் சிறப்பாக விளையாடினால் இந்திய அணி வெற்றியை தனதாக்க முடியும்’ என்று தெரிவித்தார்.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி உறுப்பினருமான வி.வி.எஸ்.லட்சுமண் அளித்த பேட்டியில், ‘விராட்கோலி எல்லையை மீறினார் என்று நான் நினைக்கவில்லை. விராட்கோலியுடன் கருத்து வேறுபாடு நிலவினாலும், இந்திய அணியின் பயிற்சியாளராக கும்பிளே தான் நீடிக்க வேண்டும் என கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி விரும்பியது. ஆனால் ராஜினாமா செய்வது தான் சரியான முடிவு என்று கருதிய கும்பிளே விலகினார்’ என்று கூறினார்.


Next Story