பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
17–வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 5–ந் தேதி முதல் பிப்ரவரி 1–ந் தேதி வரை நடக்கிறது.

* இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை நியூசிலாந்து அணி 1–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் இலங்கை–நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மவுண்ட் மாங்கானுவில் நடக்கிறது. கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் டாம் லாதமுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, டிம் செய்பெர்ட் அறிமுக வீரராக அணியில் இடம் பெறுவார் என்று தெரிகிறது. இலங்கை அணியின் கேப்டனாக மீண்டும் மலிங்கா பொறுப்பேற்றுள்ளார். அவர் தலைமையில் இலங்கை அணி எழுச்சி பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இலங்கை அணி கடந்த 2 ஆண்டுகளில் 44 ஒருநாள் போட்டியில் 33 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு அணிகளும் 95 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் நியூசிலாந்து அணி 45 ஆட்டங்களிலும், இலங்கை அணி 41 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. 8 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

* தென்ஆப்பிரிக்கா–பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கேப்டவுனில் தொடங்குகிறது. காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் அணிக்கு திரும்புவது தென்ஆப்பிரிக்க அணிக்கு வலுசேர்க்கும். ஸ்டெயின் அணியில் இருந்து நீக்கப்படுகிறார். இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

* 17–வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 5–ந் தேதி முதல் பிப்ரவரி 1–ந் தேதி வரை நடக்கிறது. 24 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 6–ந் தேதி தாய்லாந்தை சந்திக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இந்திய கால்பந்து சம்மேளன இணைய தளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘எங்களது சவாலை சந்திப்பது மற்ற அணிகளுக்கு எளிதானதாக இருக்காது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். எங்கள் அணி தோல்வியை வெறுக்கிறது. அதனை சமீப காலங்களில் நாங்கள் நிரூபித்து காட்டி இருக்கிறோம். நாங்கள் திட்டங்கள் தீட்டி அதன் படி செயல்படுகிறோம். தாய்லாந்து வலுவான அணி என்பது எங்களுக்கு தெரியும். தற்போது எங்களது முழு கவனமும் தாய்லாந்துக்கு எதிரான முதலாவது ஆட்டம் மீது தான் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.