புரோ கபடி லீக்: இறுதிப்போட்டியில் இன்று குஜராத்–பெங்களூரு அணிகள் மோதல்


புரோ கபடி லீக்: இறுதிப்போட்டியில் இன்று குஜராத்–பெங்களூரு அணிகள் மோதல்
x
தினத்தந்தி 4 Jan 2019 10:00 PM GMT (Updated: 4 Jan 2019 7:54 PM GMT)

புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்–பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை,

புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்–பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு–குஜராத் பலப்பரீட்சை

12 அணிகள் பங்கேற்ற 6–வது புரோ கபடி லீக் தொடர் கடந்த ஆண்டு அக்டோபர் 7–ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் மும்பையில் இன்று (சனிக்கிழமை) இரவு நடைபெறும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் பெங்களூரு புல்ஸ்–குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

ரோகித் குமார் தலைமையிலான பெங்களூரு புல்ஸ் அணி லீக் சுற்றில் 13 வெற்றி, 7 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் (பி) முதலிடம் பிடித்ததுடன், முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சுனில் குமார் தலைமையிலான குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி லீக் சுற்றில் 17 வெற்றி, 3 தோல்வி, 2 டையுடன் தனது பிரிவில் (ஏ) முதலிடத்தை பிடித்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு புல்ஸ் அணியிடம் தோல்வி கண்ட குஜராத் அணி, 2–வது தகுதி சுற்றில் உ.பி.யோத்தாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ரூ.8 கோடி பரிசு

இரு அணிகளும் 2–வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. 2015–ம் ஆண்டில் பெங்களூரு புல்ஸ் அணி இறுதிப்போட்டியில் மும்பை அணியிடம் தோல்வி கண்டது. கடந்த 2017–ம் ஆண்டில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ஸ் அணி இறுதிப்போட்டியில் பாட்னா பைரட்ஸ் அணியிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அடைந்தது. சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் முதல்முறையாக கோப்பையை வெல்ல முனைப்பு காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்த சீசனில் இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதின. இதில் லீக் ஆட்டம் டையில் முடிந்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டியில் கோப்பையை வெல்லும் அணி ரூ.3 கோடியை பரிசாக அள்ளும். 2–வது இடம் பெறும் அணிக்கு ரூ.1.80 கோடி பரிசாக கிடைக்கும். மொத்தம் ரூ.8 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது.

கேப்டன்கள் கருத்து

இறுதிப்போட்டிக்கு குறித்து குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் சுனில் குமார் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த சீசன் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். முதல்முறையாக கேப்டனாகி அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றுள்ளேன். இந்த சீசன் முழுவதும் நாங்கள் ஒரு அணியாக மிகப்பெரிய கூட்டு முயற்சியில் ஈடுபட்டோம். கோப்பையை வெல்ல நாங்கள் ஆவலாக இருக்கிறோம். பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் நாங்கள் சில தவறுகளை இழைத்து விட்டோம். அந்த தவறு மீண்டும் நடக்காமல் பார்த்து கொள்வோம்’ என்றார்.

பெங்களூரு புல்ஸ் அணியின் கேப்டன் ரோகித் குமார் அளித்த பேட்டியில், ‘எங்கள் அணி நல்ல நிலையில் உள்ளது. இந்த நல்ல வாய்ப்பை நாங்கள் நழுவ விடமாட்டோம். இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் எங்களுடைய நோக்கம் கோப்பையை வெல்வது தான். எங்களது ரைடை வலுப்படுத்துவதிலும், டேக்கிள்சை பலப்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இந்த சீசன் முழுவதும் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். இறுதிப்போட்டியிலும் நிச்சயமாக எதிரணிக்கு கடும் சவாலாக விளங்குவோம்’ என்று தெரிவித்தார்.

அணி வீரர்கள்

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

பெங்களூரு புல்ஸ்: ரோகித் குமார் (கேப்டன்), ராஜூ லால் சவுத்ரி, ஆசிஷ் சங்வான், பவான் ஹெராவாத், மகேந்தர்சிங், சுமித் சிங், அமித் ஷெரான்.

குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்: சுனில் குமார் (கேப்டன்), ருதுராஜ் கோர்வி, பிரபஞ்சன், சச்சின், பர்வேஷ் பன்ஸ்வால், ரோகித் குலியா, சச்சின் விட்டாலா.


Next Story