அகில இந்திய ஏ கிரேடு கபடி: வருமான வரி அணி ‘சாம்பியன்’


அகில இந்திய ஏ கிரேடு கபடி: வருமான வரி அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 19 Jan 2019 10:30 PM GMT (Updated: 19 Jan 2019 9:44 PM GMT)

அகில இந்திய ஏ கிரேடு கபடி போட்டியில், வருமான வரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

திருச்செங்கோடு,

தைப்பொங்கல் விழாக்குழு மற்றும் திருச்செங்கோடு ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 25-வது அகில இந்திய அளவிலான சூப்பர் ஏ கிரேடு கபடி போட்டி திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மின்னொளியில் நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் 19 அணிகளும், பெண்கள் பிரிவில் 19 அணிகளும் கலந்து கொண்டன. போட்டி ‘நாக்-அவுட்’ மற்றும் லீக் முறையில் நடந்தன. ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னை தபால் துறை-சென்னை வருமான வரி அணிகள் மோதின. இதில் வருமான வரி அணி 31-25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பெண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் தென் மத்திய ரெயில்வே (ஐதராபாத்)-எஸ்.எஸ்.பி. (அரியானா) அணியும் மோதின. இதில் ஆட்டம் முடிவில் இரு அணிகளும் 20-20 என்ற புள்ளி கணக்கில் சமநிலை வகித்ததால், வெற்றியை நிர்ணயிக்க இரு அணிகளுக்கும் தலா 5 ரைடுகள் கொடுக்கப்பட்டது. அதிலும் சம புள்ளிகள் எடுத்ததால் ‘கோல்டன் ரைடு’ வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற எஸ்.எஸ்.பி. அணி 26-25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

பரிசளிப்பு விழாவில் திருச்செங்கோடு ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் நாமக்கல் மாவட்ட அமெச்சூர் கபடி சங்க தலைவர் கோல்டன் ஹார்ஸ் ரவி, விழாக்குழு துணைத்தலைவர் பரந்தாமன், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி சங்க பொதுச்செயலாளர் ஷபியுல்லா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பையை வழங்கினார்கள்.


Next Story