பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thuligal in sports news

துளிகள்

துளிகள்
முட்டியில் தசைநார் கிழிவுக்கு ஆபரேஷன் செய்ய இருப்பதால் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான கரோலினா மரின் குறைந்தது 6 மாதங்கள் விளையாட முடியாது.
கரோலினா 6 மாதம் ஆட முடியாது: இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவாலை எதிர்த்து ஆடிய கரோலினா மரின் (ஸ்பெயின்) முதல் செட்டில் 10-4 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற போது, வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தால் கண்ணீருடன் பாதியிலேயே வெளியேறினார். முட்டியில் தசைநார் கிழிவுக்கு ஆபரேஷன் செய்ய இருப்பதால் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான கரோலினா மரின் குறைந்தது 6 மாதங்கள் விளையாட முடியாது. காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் வலுமிக்க வீராங்கனையாக வருவேன் என்று கரோலினா சூளுரைத்துள்ளார்.


இந்திய ‘ஏ’ அணியின் வெற்றி தொடருகிறது: திருவனந்தபுரத்தில் நடந்த இங்கிலாந்து லயன்சுக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் லயன்ஸ் நிர்ணயித்த 222 ரன்கள் இலக்கை இந்திய ‘ஏ’ அணி 46.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 73 ரன்களும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), லோகேஷ் ராகுல் 42 ரன்களும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்திய ‘ஏ’ அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. கடைசி ஆட்டம் நாளை நடக்கிறது.

முன்னதாக ஸ்டேடியத்தின் ஒரு பகுதியில் இருந்த தேன் கூடு மீது சில ரசிகர்கள் கற்களை தூக்கி எறிந்ததால் அவர்களை நோக்கி தேனீக்கள் படையெடுத்தது. தேனீக்கள் கடித்ததில், 5 ரசிகர்கள் காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் 10 நிமிடம் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

இந்திய அணிக்கு கங்குலி பாராட்டு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 ஆட்டங்களிலும் இந்தியா அபார வெற்றி பெற்று இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் சாதித்ததை விட இது சிறந்த செயல்பாடாகும். நியூசிலாந்து தொடரில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. அது மட்டுமின்றி நமது பவுலர்கள் எதிரணியை ஆல்-அவுட் ஆக்குவது உற்சாகம் தருகிறது. ஒரு நாள் கிரிக்கெட்டில் இது இந்தியாவுக்கு சிறந்த ஆண்டாக அமைந்திருக்கிறது. குல்தீப்பும், சாஹலும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை அலற வைத்துள்ளனர். ரோகித் சர்மாவும், கேப்டன் விராட் கோலியும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். இது போன்ற டாப் வரிசை இப்போது உலகில் எந்த அணிக்கும் கிடையாது. ஒரு நாள் கிரிக்கெட்டில் மற்ற அணிகளை விட இந்தியாவின் கையே இப்போது ஓங்கி நிற்கிறது. அதனால் அது நமக்கு சிறந்த உலக கோப்பை போட்டிகளில் (2019-ம் ஆண்டு) ஒன்றாக அமையலாம்’ என்றார்.

வாசிம் அக்ரம் கண்டனம்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அளித்த ஒரு பேட்டியில், ‘இனவெறி தடுப்பு கொள்கையை மீறியதாக பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவுக்கு 4 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதும், அவரை தென்ஆப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பும்படி அழைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு தவறானது. தடை முடிந்து தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் அவர் ஆடியிருக்க வேண்டும். உலக கோப்பை போட்டி நெருங்கும் நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனை இப்போது மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. சர்ப்ராஸ் அகமது கேப்டனாக நீடிக்க வேண்டும்’ என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...