புரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்


புரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 15 Feb 2019 9:15 PM GMT (Updated: 15 Feb 2019 8:39 PM GMT)

புரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடங்குகிறது. இன்றைய நாளில் சென்னை–மும்பை அணிகள் மோதுகின்றன.

சென்னை, 

புரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடங்குகிறது. இன்றைய நாளில் சென்னை–மும்பை அணிகள் மோதுகின்றன.

புரோ கைப்பந்து

முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கடந்த 2–ந்தேதி தொடங்கியது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்று தங்களுக்குள் தலா ஒரு முறை மோதி வருகின்றன.

முதற்கட்ட போட்டிகள் கொச்சியில் கடந்தது. இதுவரை 12 லீக் ஆட்டங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் 2–வது கட்ட ஆட்டங்கள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. கடைசி 3 லீக் ஆட்டங்கள் மற்றும் அரைஇறுதி, இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறும். 5 லீக்கிலும் வெற்றி கண்ட கோழிக்கோடு ஹீரோஸ் மற்றும் கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ் (4 வெற்றி), ஐதராபாத் (2 வெற்றி) ஆகிய அணிகள் ஏற்கனவே அரைஇறுதிக்கு முன்னேறி விட்டது. எஞ்சிய ஒரு இடத்திற்கு மூன்று அணிகள் மல்லுகட்டுகின்றன.

சென்னையில்...

சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கும் 13–வது லீக் ஆட்டத்தில் ஷெல்டன் மோசஸ் தலைமையிலான சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி, மும்பை வாலியை எதிர்கொள்கிறது. இதுவரை ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளி பெற்றுள்ள சென்னை அணி எஞ்சிய இரு லீக்கில் ஒன்றில் வெற்றி பெற்றால் அரைஇறுதியை உறுதி செய்து விடலாம். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் காண்பது சென்னை அணிக்கு சாதகமாக இருக்கும்.

அதே சமயம் இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும் தோற்று இருக்கும் மும்பை அணி வெற்றிக்கணக்கை தொடங்க போராடும். இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

பெண்கள் போட்டி

இதற்கிடையே இந்தியாவில் பெண்கள் கைப்பந்து போட்டியை ஊக்குவிக்கும் பொருட்டு இறுதி நாளில் (22–ந்தேதி) மாலை 5 மணிக்கு முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் காட்சி போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் புளு, மஞ்சள் என்ற பெயர்களில் இரண்டு அணிகள் களம் இறங்கும். மூன்று செட் வடிவத்தில் 15 புள்ளிகள் அடிப்படையில் இந்த போட்டி நடைபெறும்.


Next Story