சாதிக்கத் துடிக்கும் சாதனையாளரின் மகள்


சாதிக்கத் துடிக்கும் சாதனையாளரின் மகள்
x
தினத்தந்தி 16 Feb 2019 11:24 AM GMT (Updated: 16 Feb 2019 11:24 AM GMT)

‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?’ என்ற பழமொழிக்கு மிகப் பொருத்தமான பெண், தேவன்ஷி ராணா.

இந்திய துப்பாக்கி சுடுதல் விளையாட்டு என்றாலே நினைவில் வரக்கூடியவர்களில் ஒருவர், ஜஸ்பால் ராணா.

இந்திய துப்பாக்கி சுடுதலின் முன்னோடிகளில் ஒருவரான ராணா, சர்வதேச அரங்குகளில் இந்தியாவின் பெயரை பதித்தவர். 1994, 2006 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தவர்.

ஆசிய விளையாட்டு மட்டுமின்றி, ஆசிய சாம்பியன்ஷிப், உலக சாம்பியன்ஷிப்பிலும் முத்திரை பதித்தவர். தற்போது தேசிய ஜூனியர் பிஸ்டல் அணி பயிற்சியாளரான ராணாவின் புதல்விதான் தேவன்ஷி.

தந்தை வழியில் மகளும் பதக்கங்களை சுட்டு வீழ்த்தத் தொடங்கியிருக்கிறார்.

சமீபத்திய கேலோ இந்தியா போட்டியில்கூட மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கம் தட்டிவந்தார் இவர்.

தான் வளர்ந்த சூழல்தான் தன்னை ஒரு துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஆக்கியது என்கிறார், தேவன்ஷி.

19 வயதாகும் தேவன்ஷியிடம் வருங்காலங்களில் நிறைய எதிர்பார்க்கலாம் என்கிறார்கள், துப்பாக்கி சுடுதல் வட்டாரத்தினர்.

இந்த இளம் திறமைசாலி என்ன சொல்கிறார்?

‘‘துப்பாக்கிகள், அதற்கான குண்டுகள் சூழ வளர்ந்தவள் நான். அதன் தாக்கம் எனக்கு இருந்தது. மேலும், இந்த விளையாட்டு என் ரத்தத்திலேயே இருக்கிறது என்று சொல்லலாம். எங்கள் குடும்பத்தில் பலரும் துப்பாக்கி சுடுதலில் இருந்தார்கள். அப்பா துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்பதையும், பதக்கங்கள் வெல்வதையும் டி.வி.யில் பார்ப்பதே பெரிய ஊக்கமாக அமைந்தது’’ என்கிறார் தேவன்ஷி.

இவரது திறமை வெளிப்பட்ட சமீபத்திய ‘கேலோ இந்தியா’ போட்டியையும் இவர் புகழ்ந்து சொல்கிறார். உள்நாட்டில் பல விளையாட்டுகளை ஒருங்கிணைத்து முறையாக நடத்தப்படும் பிரமாண்ட போட்டி இது என்கிறார் தேவன்ஷி. ‘‘இந்த விளையாட்டுப் போட்டியை, இந்தியாவின் ஆசிய விளையாட்டு என்பேன் நான்’’ என்கிறார்.

துப்பாக்கி சுடுதலை ஒரு பொழுதுபோக்கு போலவே தான் தொடங்கியதாகவும், அதில் எதிர்காலத்தில் எந்த நிலையை எட்டுவேன் என்று ஆரம்பத்தில் தனக்கு எந்தத் தெளிவும் இல்லை என்றும் தேவன்ஷி கூறுகிறார்.

தேவன்ஷியின் தந்தையே ஒரு சர்வதேச வீரர் என்பதால் அவர் இவருக்குப் பயிற்சி அளித்தாரா என்ற கேள்விக்கு,

‘‘ஆமாம்... அவர் எனக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி அளித்தார். ஆனால் அவர் என் தலை மேல் உட்கார்ந்து கொண்டு, இதை இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டிருக்க மாட்டார். நான் எனது போக்கில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெற அப்பா அனுமதித்தார். அதேநேரம், ஏதாவது பிரச்சினை, தடை என்றால், முதலில் வந்து உதவி செய்பவர் அவர்தான்’’ என்று அப்பா புகழ் பாடுகிறார் தேவன்ஷி.

தங்கள் குடும்பத்தில் பல சிறந்த துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகள் இருந்தாலும் அதனால் தான் எந்த நெருக்கடியையும் உணரவில்லை என்று தேவன்ஷி சொல்கிறார்.

‘‘அவர் (ஜஸ்பால் ராணா) அவர்தான்... நான் நான்தான். அவர் விதிப்படி அவருக்கு நடந்தது. என் விதிப்படி எனக்கு நடக்கும். எங்களுக்கு இடையில் உள்ள ரத்த பந்தம்தான் ஒரே ஒற்றுமை’’ என நிதானமாகச் சொல்கிறார்.

எந்த ஒரு போட்டிக்கும் முன் ஏற்படும் அழுத்தத்தில் இருந்து தான் எப்படி தப்பித்துக்கொள்கிறேன் என்றும் தேவன்ஷி சொல்கிறார்...

‘‘ஒரு போட்டிக்கு முன்பு, மற்றவர்களை விட்டு நான் விலகி இருப்பேன். துப்பாக்கி சுடுவதற்கு 15, 20 நிமிடங்களுக்கு முன்பு நான் கண்களை மூடி தியானம் போல அமைதியாக இருப்பேன். போட்டியின்போது யாரையும் கண்ணோடு கண் பார்க்க மாட்டேன்.’’

டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரி மாணவியான தேவன்ஷி, இளம்பெண்கள் தங்களுக்கு விளையாட்டு பிடித்தது என்றால், அதில் தயங்காமல் ஈடுபட்டு வெற்றி காண வேண்டும் என்கிறார்.

‘‘விளையாட்டு உங்களை ஈர்த்தது என்றால், அதில் நீங்கள் சாதிக்க விரும்பினால், உங்களை யாரும் தடுக்க முடியாது. வாழ்க்கையில் நீங்கள் எட்ட விரும்பும் உயரத்தை எட்டலாம்’’ என்று தெம்பூட்டுகிறார், தேவன்ஷி.

ஒலிம்பிக் போட்டியில் வென்று தன் தந்தைக்கும், தாய்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று விரும்பும் தேவன்ஷி ராணா, அந்த உறுதியுடனே ஒவ்வொரு முறையும் துப்பாக்கியை கையில் தூக்குகிறார்.

Next Story