பிற விளையாட்டு

துளிகள் + "||" + Thulikal

துளிகள்

துளிகள்
வங்காளதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

உலக கோப்பை போட்டிக்கு பிறகும் டோனி விளையாடலாம்–கங்குலி

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகும் டோனி தொடர்ந்து விளையாடலாம். இந்திய அணி உலக கோப்பையை வெல்வதுடன், டோனியும் சிறப்பாக ஆடும் பட்சத்தில் அவர் ஏன்? ஓய்வு பெற வேண்டும். திறமை இருந்தால் வயது ஒரு பிரச்சினை இல்லை. இந்திய அணி வேகப்பந்து வீச்சில் சிறப்பாக உள்ளது. பும்ரா, முகமது ‌ஷமி உள்பட இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து நிலையான திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். எனவே உலக கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். நாக்பூர் போட்டியில் விஜய் சங்கர் பந்து வீச்சு நேர்த்தியாக இருந்தது. அவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற தகுதி படைத்தவர்’ என்று தெரிவித்தார்.

இந்திய குத்துச்சண்டை வீரர்களுக்கு திடீர் சிக்கல்

* 2020–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டையில் சில எடைப்பிரிவுகள் நீக்கப்பட்டு இருக்கின்றன. ஒலிம்பிக் குத்துச்சண்டையில் ஆண்கள் பிரிவில் 52, 57, 63, 69, 75, 81, 91 மற்றும் 91 கிலோவுக்கு மேல் ஆகிய உடல் எடைப்பிரிவுகளில் பந்தயங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பிரிவில் 51, 57, 64, 69, 75 ஆகிய எடைப்பிரிவுக்கான பந்தயங்கள் இடம் பெறுகின்றன. சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனத்தின் இந்த முடிவால் இந்திய வீரர்கள் தங்களது எடைப்பிரிவை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற அமித் பன்கால் இனி அதற்கு அடுத்த நிலையான 52 கிலோ பிரிவில் தான் பங்கேற்க முடியும். இதுவரை 60 கிலோ பிரிவில் பங்கேற்ற ஷிவதபா, மனிஷ் கவுசிக் ஆகியோர் 63 கிலோவுக்கு மாறுகிறார்கள்.

நியூசிலாந்து–வங்காளதேசம் 2–வது டெஸ்ட் இன்று தொடக்கம்

* வங்காளதேச கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் ஹாமில்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் நியூசிலாந்து–வங்காளதேசம் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று அதிகாலை தொடங்குகிறது. கடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ஆடாத வங்காளதேச அணியின் முன்னணி பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரஹிம் இந்த ஆட்டத்திலும் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

பாகிஸ்தானுக்கு தடை விதிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்–வினோத்ராய்

* இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘உலக கோப்பை போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிக்குமா? என்று கேட்கிறீர்கள். அந்த போட்டிக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கிறது. அந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் (பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு) நாடுகளுடனான கிரிக்கெட் தொடர்பை மற்ற நாடுகள் துண்டிக்க வேண்டும் என்று ஐ.சி.சி.யிடம் வற்புறுத்தி இருக்கிறோம். அது தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று ஐ.சி.சி. பதில் அளித்துள்ளது. ஆனாலும் ஐ.சி.சி. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வேண்டுகோளை முழுமையாக ஒதுக்கிவிடவில்லை. இந்த விவகாரத்தில் நடைமுறைகள் மெதுவாக தான் இருக்கும். பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம்’ என்று தெரிவித்தார்.

மும்பை அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன்

சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சூப்பர் லீக் சுற்று இந்தூரில் இன்று தொடங்குகிறது. இதில் மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் கர்நாடகாவை இன்று (மாலை 5.30 மணி) சந்திக்கிறது. மும்பை அணியின் கேப்டன் ரஹானே லேசான காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு சூப்பர் லீக் சுற்றில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் மும்பை அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட மும்பை அணியில் ‘இளம் புயல்’ பிரித்வி ஷாவும் இடம் பெற்றுள்ளார்.